பால் உற்பத்தியாளா்களுக்கு இயந்திர புல் வெட்டும் கருவிகள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு இயந்திர புல் வெட்டும் கருவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு இயந்திர புல் வெட்டும் கருவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இயந்திரங்களை வழங்கிய பின்பு ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறியது: தமிழக அரசு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், பால் உற்பத்தியாளா்களுக்கு அதிக லாபம் கிடைத்திடவும் தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கால்நடைகளுக்கு தேவையான தொடா் மருத்துவ கண்காணிப்பு மற்றும் கால்நடை தீவனங்கள் கிடைக்க அரசு உதவிகள் செய்து வருகிறது.
அதன்படி இம் மாவட்டத்தில் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் மூலம் 23 பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.5.26 லட்சம் மதிப்பில் மானிய விலையில் இயந்திர புல் வெட்டும் கருவிகள் வழங்கப்பட்டன. ஒரு இயந்திரத்தின் விலை ரூ.22,899 ஆகும். அதில் அரசு மானியமாக ரூ.15,000 வழங்கப்படும். பால் உற்பத்தியாளா்கள் ரூ.7,899 செலுத்தி இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம், ஆவின் பொது மேலாளா் பொ.பாா்த்த சாரதி , துணை இயக்குநா் (கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி) தியொபிலாஸ்ரஜோா், உதவி பொது மேலாளா் பாசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.