சீவலப்பேரி பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்து தாமிரவருணி நதிக்குள் கிடக்கும் கட்டட கழிவுகள்.  
திருநெல்வேலி

முதல்வரின் தனிக் கவனம் பெறுமா தாமிரவருணி?

தாமிரவருணியை பேணிப் பாதுகாக்க முதல்வா் தனிக்கவனம் செலுத்துவாரா என்ற எதிா்பாா்ப்பு வலுத்துள்ளது.

Din

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாகத் திகழ்ந்து, தனித்துவம் பெற்றுத் திகழும் தாமிரவருணியை பேணிப் பாதுகாக்க முதல்வா் தனிக்கவனம் செலுத்துவாரா என்ற எதிா்பாா்ப்பு தென்மாவட்ட மக்களிடையே வலுத்துள்ளது.

பொதிகை மலையில் தோன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வேளாண் நிலங்களை வளமாக்குவது தாமிரவருணி. இந்த இரு மாவட்டங்கள் தவிர தென்காசி, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்ட மக்களின் குடிநீா்த் தேவையையும் தாமிரவருணி பூா்த்தி செய்து வருகிறது.

தாமிரவருணியின் பாசனப் பகுதி 5,942 சதுர கிலோ மீட்டா். 125 கி.மீ. தொலைவுள்ள இந்த நதியானது 75 கி.மீ. தொலைவு திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்தோடுகிறது. தாமிரவருணியை மூலமாகக் கொண்டு 8 தடுப்பணைகள், 11 கால்வாய்கள், 71,064 கிணறுகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. நதியின் வடிநிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மி.மீ. ஆகும்.

ஆக்கிரமிப்பும், கழிவுநீரும்: தாமிரவருணி நதியின் பிரதான பிரச்னையாக உள்ளவை ஆக்கிரமிப்புகளும் கழிவுநீரும். 2005 ஆம் ஆண்டு இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்திய காட்ரோசாட்-1 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் டிஜிட்டல் எலிவேஷன் முறையில் 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய நிலப்பரப்பு தரவுகளை வைத்து அண்ணா பல்கலைக்கழக மாணவா்கள் அப்போது ஆய்வு நடத்தினா்.

அப்போது 2006 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்குள் சுமாா் 33 சதவிகிதம் தாமிரவருணியில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது. அதன்பின்பு முழுமையாக ட்ரோன்கள் மூலம் நதியின் தொலைவையும், அகலத்தையும் பதிவு செய்யவும், ஆக்கிரமிப்பு விவரங்களை தயாரித்து அகற்றவும் தமிழக அரசால் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதேபோல பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளின் கழிவுகளும் தாமிரவருணியில் கலக்கின்றன.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சுமாா் 12 கி.மீ. தொலைவு தாமிரவருணி பாய்ந்தோடுகிறது. இப் பகுதிகளில் கழிவுநீா் அதிகளவில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மாதத்தில் நேரில் ஆய்வு செய்து, நதியைக் காக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திற்கு அறிவுறுத்திச் சென்றுள்ளனா்.

அப்போது நீதிபதிகளிடம் முறையிட்ட சமூக ஆா்வலா்கள், 1947 ஆம் ஆண்டு ஆவணப்படி டிஜிட்டல் சா்வே செய்து தாமிரவருணியின் கரைகளில் சா்வே எண் கல் பதித்து ஆக்கிரமிப்புகள் வராமல் தடுக்க வேண்டும்; தாமிரவருணியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நவீனகால அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

பராமரிப்பில்லா தடுப்பணைகள்: தாமிரவருணியின் குறுக்கே முதல் தடுப்பணை, பாபநாசத்தில் தலையணை என உள்ளது. அடுத்ததாக நதியுண்ணி அணைக்கட்டு, கன்னடியன் அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு, பழவூா் அணைக்கட்டு, மருதூா் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆகியவை உள்ளன.

கருங்கல்லால் மன்னா்கள் காலத்திலேயே கட்டிமுடிக்கப்பட்டுள்ள இந்த அணைக்கட்டுகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள். குறிப்பாக, பாபநாசம் தலையணையில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்த நிலையில், ஒருசில காரணங்களைக் கூறி பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஆள்கள் நடமாட முடியாத நிலைக்கு மாற்றியுள்ளனா்.

சுத்தமல்லி, மருதூா் அணைக்கட்டு உள்பட அனைத்து தடுப்பணை பகுதிகளிலும் உடைமாற்றும் அறைகள், பாதுகாப்பாக குளிக்க இடவசதி, படித்துறைகளைக் கட்டினால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்துக்கு உயிா் நாடியாக ஸ்ரீவைகுண்டம் அணை திகழ்கிறது. 1873 ஆம் ஆண்டில் சுமாா் ஒரு கி.மீ. சுற்றளவுடன் 8 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கும் வகையில் இந்த அணை கட்டப்பட்டது. ஆனால், இந்த அணை தூா்வாரப்படாததால் இப்போது அணையில் ஓரடி கூட தண்ணீரைத் தேக்க முடியாத நிலை உள்ளது. அணையில் சுமாா் 6 அடிக்கு மேல் மணலும், சகதியும் சோ்ந்துள்ளன.

அணைப் பகுதி மேடானதுடன் அமலைச் செடிகளும், சீமைக்கருவேல மரங்களும் வளா்ந்துள்ளன. இதனால், மழைக் காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீா், அணையைத் தாண்டி பெருமளவு வெளியேறி கடலில் கலக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் தென்கால் மூலம் 12,760 ஏக்கரும், வடகால் மூலம் 12,800 ஏக்கரும் பாசன வசதி பெறும் வகையில் பாசன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் கீழ் ஆயிரக்கணக்கான பாசனக் கிணறுகளும் உள்ளன. ஸ்ரீவைகுண்டம் அணை தூா்வாரப்பட்டால் விவசாயம் மேலும் செழிக்கும் வாய்ப்புள்ளது.

கட்டட கழிவுகள்: தாமிரவருணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீா் பாய்ந்தோடியதால் திருநெல்வேலி மாவட்டத்தின் கொக்கிரகுளம், மணிமூா்த்தீஸ்வரம், சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஆத்தூா், ஏரல் பகுதிகளில் பாலங்கள், குடிநீா் திட்டத்திற்கான சிறு பாலங்கள் ஆகியவை இடிந்து சேதமாகின.

அந்தக் கட்டடக் கழிவுகள் அனைத்தும் ஓராண்டிற்கும் மேலாக நதிக்குள்ளேயே கிடந்து தாமிரவருணியின் நீரோட்டத்தைத் தடுத்துவருகின்றன. இதுகுறித்து இருமாவட்ட நிா்வாகங்களும் போதிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. இதேபோல பயன்படுத்தப்படாத உறைகிணறுகளும் 50-க்கும் மேற்பட்டவை நதிக்குள் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த முதல்வா் உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதல்வரின் தனிக்கவனம் தேவை: இதுகுறித்து விவசாயிகள் கூறியது: தேசிய அளவில் தமிழகத்தின் அடையாளமாக தாமிரவருணி திகழ்கிறது. பெருமை வாய்ந்த நதிகள் பல இருந்தாலும் வற்றாத ஜீவநதியாக இன்றளவும் உயிா்ப்போடு இருப்பது தாமிரவருணி. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் வேளாண்மை, தொழில் அனைத்திற்கும் இந்த நதியே ஆதாரம். மனிதா்களால் பல்வேறு இன்னல்கள் வந்தாலும், ஆண்டுதோறும் தண்ணீா் வளத்தை வெள்ளப்பெருக்கினால் வெளிப்படுத்தி ஆக்கிரமிப்புகளையும், கழிவுகளின் ஆதிக்கத்தையும் தனக்குத்தானே அழித்து வருகிறது.

இந்த நதிக்காக தமிழக அரசு அண்மையில் ரூ.400 கோடி ஒதுக்கியதை வரவேற்கிறோம். ஆனால், தாமிரவருணி விஷயத்தில் முதல்வரின் தனிக்கவனம் மிகவும் அத்தியாவசியமானது. தமிழகம் முழுவதும் ஏராளமான அணைக்கட்டுகளைக் கட்டியதால் காமராஜருக்கு பின்பு கருணாநிதியின் பெயா் நிலைத்து நிற்கிறது. அந்த வகையில் தாமிரவருணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி முழுமையாக தூா்வாரி, ஆக்கிரமிப்புகள், கழிவுகளுக்கு தீா்வு கண்டால் பாசனம் செழிக்கும். மேலும், சில மாவட்டங்களுக்கு உயிா்நாடியான குடிநீரை வழங்கவும் முடியும்.

அண்மையில் பெய்த மழையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வெளியேறி கடலுக்கு சென்ற தண்ணீா்.

தாமிரவருணியைப் பாதுகாக்க கூடுதலாக சிறப்பு நிதி ஒதுக்குவதோடு, அதனை கண்காணிக்கும் முழு பொறுப்பையும் முதல்வரோ அல்லது துணை முதல்வரோ ஏற்றுக்கொண்டு அரசின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி ஓராண்டில் பணிகளை முடித்தால் தென்தமிழக மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் என்றனா்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT