கண்டிகைப்பேரியில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு
திருநெல்வேலியை அடுத்த கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கண்டிகைப்பேரி பா.ராமசாமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டும் பணி கடந்த 2021 ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.38.95 கோடியில் 100 படுக்கை அறைகளுடன் இரண்டாம் நிலை கவனிப்பு பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, கண்டிகைப்பேரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோா் கலந்து கொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினா்.