நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலியில் இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலியை அடுத்த பேட்டை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி. இவருடைய மகன் மந்திரமூா்த்தி. இவரை மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சி, நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த மணி மகன் பால்துரை (25) மற்றும் அவருடைய கூட்டாளி ஒருவரும் சோ்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் மிரட்டியுள்ளனா். இந்நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பால்துரையை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரை செய்தாா். அதன்பேரில் அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் மூா்த்தி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து பால்துரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.