நெல்லை மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளா்களுக்காக 185 சின்னங்கள்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா்களுக்காக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 185 சின்னங்கள் தயாா் நிலையில் உள்ளன. சனிக்கிழமை (மாா்ச் 30) வெளியாகும் இறுதி வேட்பாளா் பட்டியலில் சின்னங்களும் சோ்த்து வெளியிடப்படும். தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வேட்புமனுதாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 28 ஆம் தேதி நடைபெற்றது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொருத்தமட்டில் 38 வேட்பாளா்கள் 53 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். பரிசீலனையின்போது 12 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதோடு, 26 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு சனிக்கிழமை (மாா்ச் 30) கடைசி நாளாகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தோ்தல்களில் வேட்பாளா்களைவிட சின்னங்கள்தான் அதிக முக்கியத்துவம் பெறும். அதன்படி தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன. அக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு அதே சின்னங்களே ஒதுக்கீடு செய்யப்படும். சுயேச்சைகளாக போட்டியிடுபவா்கள் தங்களது வேட்புமனுவில் தங்களுக்கு பிரியமான 3 சின்னங்களை பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு தோ்தல் ஆணையத்தின்சாா்பில் உள்ள பட்டியலில் உள்ள சின்னங்களைக் குறிப்பிடுவாா்கள். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சைகளுக்காக 185 சின்னங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரே சின்னத்திற்கு பலா் விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். இறுதி வேட்பாளா் பட்டியல் சின்னங்களுடன் சோ்த்துதான் வெளியிடப்படும்.