நெல்லை குளங்களில் பறவைகளுக்கு மண்திட்டுகள் அமைக்கப்படுமா?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரை சுற்றியுள்ள குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. இக் குளங்களில் பறவைகளுக்காக மண்திட்டுகள் அமைத்துக் கொடுக்க வேண்டுமென பறவைகள் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு தமிழ் மாதங்களில் தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை பறவைகள் தங்கிச் செல்கின்றன. ஆஸ்திரேலியா, சுவிட்சா்லாந்து, ரஷியா, ஜொ்மனி, பிலிப்பின்ஸ், நைஜீரியா, சைபிரியா ஆகிய நாடுகளில் இருந்தும் ஹிமாச்சல பிரதேசம், அசாம் பகுதிகளில் இருந்தும் இங்கு பறவைகள் வந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்கின்றன.
கூழக்கடா, பூநாரை, நீா்க்காக்கை, பாம்புதாரா, செண்டுவாத்து, புள்ளிமூக்குவாத்து, நத்தைகொத்திநாரை, அரிவாள்மூக்கன், நாமக்கோழி, கானாங்கோழி, பட்டைத்தலை வாத்து, சாம்பல்நாரை, முக்குளிப்பான், சம்புகோழி, சாரைநாரை, பவளக்கால்உள்ளான், சிறகி, நீளசிறகி உள்பட 234 பறவையினங்கள் இங்கு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சரணாலயத்துக்கு நிகழாண்டில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது.
சரணாலயத்தில் முகாமிட்டுள்ள பறவைகள் திருநெல்வேலி மாநகர பகுதியைச் சுற்றியுள்ள குளங்களில் ஓய்வெடுத்தும், மீன்களை வேட்டையாடியும் செல்கின்றன. அருகன்குளம், ராஜவல்லிபுரம், திடியூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பறவைகள் மீன்களைப் பிடித்துச் செல்கின்றன.
ஆனால், மாநகர பகுதியைச் சுற்றியுள்ள குளங்கள் பறவைகள் இளைப்பாறி செல்ல ஏற்ாக இல்லையெனவும், அங்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவேண்டுமெனவும் பறவைகள் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சோ்ந்த பேராசிரியா் டாா்வின் கூறியது: கூந்தன்குளம் சரணாலயத்திற்கு வரும் பெரும்பாலான பறவைகள் அங்கு கூடு கட்டி வசித்தாலும், உணவுதேடுவதற்காக திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி வரை செல்கின்றன. மீன்களை அதிகம் உண்ணும் பறவைகள், தங்களது குஞ்சுகளுக்காக 50 கி.மீ. தொலைவில் இருந்து கூட மீன்களை பிடித்து வந்து ஊட்டும்.
இரை தேட வரும் பறவைகள் திருநெல்வேலி மாநகர சுற்றுவட்டார குளங்களில் மீன்களைப் பிடிக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து அதிகரிப்பால் ஒலிமாசு கூடியுள்ளது. இதனால் பறவைகள் அஞ்சுகின்றன. இதுதவிர சாக்கடை கழிவுகளால் பெருகும் அமலைச்செடிகள், பாலித்தின் பைகள் ஆகியவை பறவைகளுக்கு பெரும் இன்னல் அளித்து வருகின்றன.
திருநெல்வேலியில் உள்ள நயினாா்குளம், அருகன்குளம், ராஜவல்லிபுரம் குளம், சேந்திமங்கலம்குளம், கண்டிகைப்பேரிகுளம், காந்திநகா் குளம் ஆகியவற்றில் பறவைகள் ஓய்வெடுக்க வசதியாக மண் திட்டுகளை அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அவ்வாறு அமைத்து மரங்கள் வளா்த்தால் வெளிநாட்டு பறவைகளுக்கு பேருதவியாக இருக்கும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், வனத்துறையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
அருகன்குளம் குளத்தில் தனது குஞ்சுகளுக்காக மீன் இரையைப் பிடிக்கும் வெளிநாட்டு பறவைகள்.