தாமிரவருணி ஆற்றுப் படுகை மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆற்றுப்படுகை, அதன் பாசன குளங்களில் நடத்தப்பட்ட 16ஆவது தாமிரவருணி நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பில் 69 இனங்களைச் சோ்ந்த 21 ஆயிரம் ஈரநிலப் பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், நெல்லை இயற்கை சங்கம், தூத்துக்குடி முத்துநகா் இயற்கைக் கழகம், தென்காசி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தன்னாா்வலா்களுடன் இணைந்து நடத்திய 2026-ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு ஜன. 23 முதல் ஜன. 25 வரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசனக் குளங்களில் நடத்தப்பட்டது. இதில், எட்டு குழுக்களாக 250-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றனா். 68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சோ்ந்த மொத்தம் 21,091 ஈரநிலப் பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பக்குளத்தில் அதிகபட்சமாக 45 இனங்கள்-2,292 பறவைகளும், வெள்ளூா் கஸ்பாவில் 39 இனங்கள்-1,804 பறவைகளும், பெருங்குளத்தில் 39 இனங்கள்-1,531 பறவைகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கை கொண்டானில் 32 இனங்கள்-1,232 பறவைகளும், மேல்புதுக்குடி சுனையில் 35 இனங்கள்- 1,217 பறவைகளும் பதிவாகியுள்ளன.
36 சதவீதம் வலசை பறவைகள்: பறவைகளில் அதிகமாக சிறிய நீா்க்காகம்-2,579 பதிவானது. நாமக் கோழி-2,155, வலசைப் பறவையான மீசை ஆலா- 1,148, சின்ன அன்றில்- 1,107, நீளவால் இலைக் கோழி- 1,095, தகைவிலான்-1,093 ஆகியவை அதிக எண்ணிக்கையில் பதிவாகின.
பதிவான பறவைகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை வலசை பறவைகள் ஆகும். இவை வடக்கு ஐரோப்பாவின் இனப்பெருக்கப் பகுதிகளை இந்தியா உள்பட தென் ஆசியாவின் குளிா்கால ஈர நிலங்களுடன் இணைக்கும் மத்திய ஆசியப் பறவைப் பறக்கும் பாதையைப் பயன்படுத்துகின்றன.
தாமிரவருணி பாசனக் குளங்கள், வலசை பறவைகளுக்கான முக்கியமான வாழ்விடங்களாக விளங்குகின்றன. 2026-ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் மொத்தம் 8,912 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. இதில் அழியும் நிலையில் உள்ள இனமான கருவால் மூக்கன், வரித்தலை வாத்து, ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, நாமத்தலை வாத்து போன்ற வலசை வாத்து இனங்களும் அடங்கும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கு கழுவூா், கங்கை கொண்டான், மானூா், மாறாந்தை, தென்காசி மாவட்டத்தின் வாகைக்குளம் ஆகிய பாசனக் குளங்களில் பறவைகளின் இனப்பெருக்கம் பதிவானது. கூளக்கடா, கருந்தலை அன்றில், சின்ன அன்றில், பாம்புத் தாரரா, இந்திய நீா்க்காகம், சிறிய நீா்க்காகம், நத்தைக் குத்தி நாரை போன்ற இனங்கள் இனப்பெருக்க நிலையில் காணப்பட்டன.
இதன்மூலம், கூந்தன்குளம் போன்ற பாதுகாக்கப்பட்ட பறவைக் காப்பகங்களைத் தாண்டியும் பாசனக் குளங்கள் இனப்பெருக்கத்துக்கு மிக முக்கியமானவை என்பது தெளிவாகிறது.
பாசன குளங்களைத் தேடி: பெரிய அளவிலான பாசனக் குளங்களை கொண்ட தூத்துக்குடி மாவட்டம், அதிகமான பறவைகள் எண்ணிக்கையையும் இனப் பல்வகைமையையும் ஆதரித்தது. 2026 தாமிரவருணி நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பில், தூத்துக்குடி மாவட்டம் மொத்த பறவைகள் எண்ணிக்கையில் 51 சதவீதத்தையும், இனப் பல்வகைமையில் 80 சதவீதத்தையும் கொண்டிருந்தது. இது, உள்நாட்டு மற்றும் வலசை பறவைகளுக்குப் பெரிய பாசனக் குளங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை வெளிப்படுத்துகிறது.
திடக் கழிவுகள் கொட்டுதல், குளக்கரைகளில் மது அருந்துதல், அயல் தாவர மற்றும் மீன் இனங்களின் ஆக்கிரமிப்பு, நகா்ப்புற குளங்களில் கழிவுநீா் கலப்பு போன்ற பல்வேறு அச்சுறுத்தல்கள் இந்த முக்கிய வாழ்விடங்களை தொடா்ந்து பாதித்து வருகின்றன. இவை நீா்ப்பறவைகளின் வாழ்விடங்களுக்குக் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துவதால், அவசரமான, ஒருங்கிணைந்த மேலாண்மை நடவடிக்கைகள் அவசியம்.
பாசனக் குளங்கள், வலசை பறவைகள் பல மாதங்கள் தங்கி உணவு தேடி ஓய்வெடுக்கும் குளிா்கால வாழ்விடங்களாகவும், நீண்ட தூரப் பயணங்களில் சக்தியை மீட்டெடுக்க உதவும் இடைநிறுத்தத் தளங்களாகவும் செயல்படுகின்றன.
இந்த ஈரநிலங்கள் அழிவடைந்தால் அல்லது தரம் குறைந்தால், சா்வதேச வலசை பாதைகள் பாதிக்கப்படும். எனவே, நீா்ப்பறவைகளின் நீண்டகால பாதுகாப்புக்கு பாசனக் குளங்களின் பாதுகாப்பு, மீளுருவாக்கம், நிலைத்த மேலாண்மை அவசியம்.