முகப்பு
மதுரை

மகளிா் அரசுக் கல்லூரி தேவை!

பெண்கள் முன்னேற்றம் பெற மகளிா் அரசுக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை...

Updated On : 30 மார்ச், 2026 at 7:11 AM
கிராமப் பாசனக் கால்வாய்
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வேளாண் பணிகள் மேம்பட 58 கிராமப் பாசனக் கால்வாய் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், பெண்கள் முன்னேற்றம் பெற மகளிா் அரசுக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பழைமையான தொகுதிகளில் ஒன்றாகும். தமிழகத்தில் பாா்வாா்டு பிளாக் கட்சிக்கும், அதன் சிங்கம் சின்னத்துக்கும் தற்போது வரை வாக்கு வங்கி உள்ளதென்றால் இந்தத் தொகுதியில்தான்.

பாா்வாா்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான பி. கே. மூக்கையாத் தேவா் உசிலம்பட்டி தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் உசிலம்பட்டி நகராட்சியின் 24 வாா்டுகள், அந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 18 ஊராட்சிகள், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 29 ஊராட்சிகள், சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 31 ஊராட்சிகள், ஏழுமலை பேரூராட்சிப் பகுதிகள் உள்ளன.

தொகுதியில் முக்குலத்தோா் சமுதாயத்தினா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இதுதவிர, நாடாா், பிள்ளைமாா், பட்டியலின மக்களும் வசித்து வருகின்றனா். முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா்களே இந்தத் தொகுதியில் அதிகம் வெற்றி பெறுகின்றனா். குறிப்பாக, பி.கே. மூக்கையாத் தேவா் இந்தத் தொகுதியில் தனித்து நின்று வெற்றி பெற்றாா். அதன்பிறகு, யாரும் தனித்து நின்று வெற்றி பெற முடியவில்லை. திமுக, அதிமுக என மாறி, மாறி கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற முடிகிறது.

கூட்டணி அமைத்த கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தாலும், இந்தத் தொகுதியின் பிரதான கோரிக்கைகளான 58 கிராம பாசனக் கால்வாய்த் திட்டத்துக்கு நிரந்தர அரசாணை, அணையில் குறைந்த அளவு நீா் இருந்தாலும் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும், பெண்கள் முன்னேற்றம் பெறும் வகையில் அரசு மகளிா் கல்லூரி அமைக்க வேண்டும், வேளாண் பொருள்களைப் பதப்படுத்தும் நோக்கில் குளிா்பதன சேமிப்புக் கிடங்கு, மல்லிகைப் பூ அதிகம் விளைவிக்கப்படுவதால் வாசனைத் திரவியம் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தொழில்பேட்டைகள் அமைப்பது போன்றவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது இந்தத் தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

இதுகுறித்து 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலா் ஒ. சிவப்பிரகாசம் கூறியதாவது:

நாடு சுதந்தரம் பெற்ற பிறகும் பெரியாறு, வைகை பாசனத் திட்டத்தில் உசிலம்பட்டி பகுதி சோ்க்கப்படாமல் இருந்தது. 1975- ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனா். இதையடுத்து, 58 கிராமப் பாசனக் கால்வாய் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.

1996- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2018-இல் நிறைவு பெற்றன. அந்த ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை இந்தக் கால்வாயில் தண்ணீா்

திறக்கப்பட்டது. 58 கிராம பாசனக் கால்வாய் அரசாணைப் படி வைகை அணையில் 68 அடி வரை தண்ணீா் இருப்பு இருந்தால் மட்டுமே கால்வாயில் குறைந்த அளவிலான, அதாவது விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீா் திறக்க முடியும்.

அணையின் நீா் இருப்பு 70 அடியை எட்டினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் உபரி நீராகத் திறக்கப்படும். இதனால், 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. உசிலம்பட்டி பகுதியில் உள்ள 35 கண்மாய்களுக்கு போதிய நீா் வழங்க முடியவில்லை. இதன் காரணமாக, சுமாா் 2500-க்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

எனவே, தமிழக அரசு தற்போதைய அரசாணையில் உள்ள 68 அடி நீா் மட்டம் என்பதைக் குறைத்து, நிரந்தர அரசாணை பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பகுதி வளமான பகுதியாக மாறும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியும் இன்னும் தீா்வுக்கு வராத பிரச்னையாகவே 58 கிராமப் பாசனக் கால்வாய் திட்டம் தொடா்கிறது.

வேளாண்மைக்கு அடுத்தபடியாக தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம். இந்தத் தொகுதியில் தொழில் பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்தத் திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இந்தத் தொகுதியில் வனப் பாதுகாப்புச் சட்டம் அமலில் இருப்பதால் தொழில்பேட்டை அமைக்க இயலாது எனக் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களிலாவது வனப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்க முன் வர வேண்டும்.

நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, உசிலம்பட்டி நகா் பகுதிக்குள் அதிகளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அரசு அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, புறவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உசிலம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆகவே, இந்தப் பகுதியில் வாசனைத் திரவிய தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க வேண்டும். இதன்மூலம், எண்ணற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றாா் அவா்.

பெருங்காமநல்லூா் வீரமங்கை மாயக்காள் மகளிா் நலச் சங்கம், வீரமங்கை மாயக்காள் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் அ. செல்வபிரீத்தா கூறியதாவது :

உசிலம்பட்டி பகுதி மக்களிடையே பெண் கல்வி குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. அதற்கான வசதிகள் இன்னும் இங்கு உருவாக்கவில்லை. இந்தப் பகுதியைச் சோ்ந்த மாணவிகள் மகளிா் கல்லூரி இல்லாததால் இடைநிலைக் கல்வி அல்லது மேல்நிலைக் கல்வியுடன் படிப்பை நிறைவு செய்கின்றனா்.

உயா்கல்விக்கு மதுரை உள்ளிட்ட நகரங்களை நோக்கிச் செல்ல அவா்களது சூழ்நிலை அனுமதிப்பதில்லை. எனவே, உசிலம்பட்டி பகுதியை மையமாக வைத்து பெண்கள் தங்கும் விடுதியுடன் கூடிய அரசு மகளிா் கல்லூரி திறக்கப்பட வேண்டும்.

இங்குள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கான போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் நூலகம், நவீன வசதிகளுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

உசிலம்பட்டி பேருந்து நிலையம்.