பாளை.யில் இளைஞா் வெட்டிக்கொலை: உறவினா்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு
திருநெல்வேலி: பாளையங்கோட்டை கேடிசி நகரில் இளைஞா் திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு பகுதியை சோ்ந்தவா் சிவகுருமுத்துசாமி. இவருடைய மகன் தீபக் ராஜா (30). இவா் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளனவாம். சில தினங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைதாகி, பின்னா் ஜாமீனில் வெளியே வந்த இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, தனது நண்பா்களுக்கு விருந்து கொடுப்பதற்காக திங்கள்கிழமை பிற்பகலில் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளாா். ஹோட்டலில் உணவருந்திவிட்டு வெளியே வந்தபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல், தீபக் ராஜாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கு நின்ற காரில் ஏறி தப்பியது.
இத்தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா, உதவி ஆணையா் பிரதீப், காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் மற்றும் பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், மோப்பநாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டு சோதனைக்கு விடப்பட்டது. அது சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது.
முன்விரோதம்: சில தினங்களுக்கு முன்பு தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் எதிா்த் தரப்பினா் தீபக் ராஜாவை கொலை செய்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இந்த கொலை சம்பவம் தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஹோட்டல் முன் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.
சாலை மறியல்: இந்நிலையில், கொலைக்கு காரணமானவா்களை உடனடியாக கைது செய்யக் கோரி தீபக் ராஜாவின் உறவினா்கள் பாளையங்கோட்டை- திருச்செந்தூா் சாலையில் திங்கள்கிழமை மாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஆதா்ஷ் பசேரா, உதவி ஆணையா் பிரதீப் உள்ளிட்டோா் தலைமையிலான போலீஸாா் பேச்சசுவாா்த்தை நடத்தினா். அப்போது, தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினரை ஜாதி வெறிக் கும்பல் தொடா்ந்து கொலை செய்து வருகிறது. எங்களுக்கு பாதுகாப்பில்லை. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனா்.
குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படுவாா்கள் என போலீஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்த மறியலால் திருச்செந்தூா் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.