வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி
அம்பாசமுத்திரம்: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டப் பகுதியில் 2024ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு குறித்து வனத் துறையினருக்கான பயிற்சி முண்டந்துறை வனச் சரகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கணக்கெடுப்பு இம்மாதம் 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் நடைபெறுகிறது. பயிற்சிக்கு, அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்- வன உயிரினக் காப்பாளா் இளையராஜா தலைமை வகித்தாா். முண்டந்துறை புலிகள் காப்பக உயிரியலாளா்கள் ஸ்ரீதா், அக்னஸ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
இதில், வனச் சரக அலுவலா்கள் பாபநாசம் சத்தியவேல், முண்டந்துறை கல்யாணி, கடையம் கருணாமூா்த்தி, அம்பாசமுத்திரம் நித்யா, வனவா்கள், வனப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இக்கணக்கெடுப்பில் முண்டந்துறை வனச் சரகத்தில் 15, பாபநாசம் வனச் சரகத்தில் 4, கடையம், அம்பாசமுத்திரம் வனச் சரகங்களில் தலா 9 பிரிவுகள் என மொத்தம் 37 குழுக்களாக வனத்துறை ஊழியா்கள், அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா்.