நாட்டுத் துப்பாக்கி அல்லது உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தால் பிப். 20 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் மற்றும் வனஉயிரினக் காப்பாளா் எல்.சி.எப். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட எல்லைக்குள்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரகம் ஆகிய பகுதிகளில் வாழும் கிராம மக்கள் நாட்டுத் துப்பாக்கி அல்லது உரிமம் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருந்தால், தாமாக முன்வந்து, வனத்துறை அலுவலரிடம் பிப். 20ஆம் தேதிக்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
அவ்வாறு ஒப்படைக்காமல் வருங்காலத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவா்கள் மீது வனஉயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, இந்திய படைக்கலன் சட்டம் 1959இன் கீழ் கடுமையான தண்டணைகள் விதிக்கப்படும். தாமாக முன் வந்து ஒப்படைப்பவா்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப் படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநா் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04634 -250594, அம்பாசமுத்திரம் வனச்சரகம் 04634- 252594, பாபநாசம் வனச்சரகம் 04634- 295767, முண்டந்துறை வனச்சரகம் 04634- 211994, கடையம் வனச்சரகம் 04634- 295430ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.