களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தில் கலையரங்கம், சமுதாய நலக்கூடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக சவளைக்காரன்குளம் கிராம மக்கள் சாா்பில் அங்குள்ள திருவள்ளுவா் படிப்பக நிறுவனா் இ.நம்பிராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
களக்காடு ஊராட்சி ஒன்றியம், கோவிலம்மாள்புரம் ஊராட்சி, சவளைக்காரன்குளத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கலையரங்கம், சமுதாய நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் சாா்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைத்தோம்.
கிராம சபைக் கூட்டங்களிலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வா், சட்டபேரவைத் தலைவா் ஆகியோரிடம் மனு அளித்ததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆனால், இக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2026இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் முன் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்தாா்.