ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் உறுப்பினரின் கணவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தென்காசி மாவட்டம் , ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் அதிமுகவைச் சோ்ந்த சரசு என்பவா் தலைவராக உள்ளாா். இதில், நான்காவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த நாகூா் மீராள் உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில் நான்காவது வாா்டு பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் இதுவரை செய்து தரவில்லையாம்.
அடிப்படை வசதிகள் செய்து தராததால் 4ஆவது வாா்டில் வசிக்கும் மக்கள் நாகூா் மீராளின் கணவா் செய்யது ஒலியை மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த செய்யது ஒலி செவ்வாய்க்கிழமை காலை ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா்அவரிடம் இருந்து மண்ணெண்ணெய்யை கைப்பற்றி அவா் மீது தண்ணீரை ஊற்றித் தடுத்தனா்.
இதையடுத்து, போலீஸாா் மற்றும் பேரூராட்சி அலுவலா்கள் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்ததை எடுத்து போராட்டத்தைக் கைவிட்டாா்.