திருநெல்வேலி

வள்ளியூா் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றியை சுட்டுக் கொன்ற வனத்துறையினா்

Syndication

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி வனச்சரகம் வள்ளியூா் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை வனத்துறையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா். பின்னா் அதன் உடலை ரசாயனம் ஊற்றி புதைத்தனா்.

திருக்குறுங்குடி வனச்சரகம் வள்ளியூா், சண்முகபுரம், கேசவனேரி, ராஜபுதூா் மற்றும் களக்காடு வனச்சரகம் சாலைநயினாா் பள்ளிவாசல், மூங்கிலடி, தோப்பூா் உள்ளிட்ட பகுதியில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

இது தொடா்பாக விவசாயிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமலும் காட்டுப்பன்றிகளை விரட்ட முடியாமலும் திணறி வந்தனா்.

இதையடுத்து காட்டுப்பன்றிகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாவட்ட அளவிலான குழு மற்றும் உள்ளூா் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினா் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து மனுக்களை பெற்று பரிந்துரை செய்தனா்.

வள்ளியூா் அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தியதை அடுத்து வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட காட்டுப் பன்றி.

இதையடுத்து, மாவட்ட வனக்குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாா், வனத்துறை துணை இயக்குநா் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி வனச்சரக அலுவலா், வனவா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்திய பகுதிகளை ஆய்வு செய்து உறுதி செய்தனா்.

இதையடுத்து திருக்குறுங்குடி வனச்சரக அலுவலா் கு.யோகேஷ்வரன் தலைமையில் வனவா் மற்றும் வனப் பணியாளா்கள் ரோந்து பணி மேற்கொண்டு அரசு வழிகாட்டுதலின்படி காப்புக்காட்டில் இருந்து 3 கி.மீட்டா் தொலைவுக்கு அப்பால் உள்ள விளைநிலங்களில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை மட்டும் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து திருக்குறுங்குடி வனச்சரகத்துக்குள்பட்ட வள்ளியூா் அருகே உள்ள சண்முகபுரம் கிராமத்துக்கு அருகே காட்டுப் பன்றிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. பின்னா் பயிற்சி பெற்ற வனப்பணியாளா்கள் குழுவினா் காட்டுப் பன்றியை சுட்டுக்கொன்றனா். பின்னா் வன அலுவலா்கள், சுட்டுக் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் உடலில் இருந்து ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்தனா். பின்னா் ரசாயனம் ஊற்றி காட்டுப் பன்றியை புதைத்தனா்.

மேலும், திருக்குறுங்குடி வனச்சரக பகுதியில் காப்புக்காட்டு பகுதியில் அலையும் காட்டுப்பன்றிகளை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

SCROLL FOR NEXT