ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த சுத்தமல்லி விலக்கு ஆட்டோ ஓட்டுநா்கள். 
திருநெல்வேலி

ஆழ்வானேரி, பழவூா் ஊராட்சிகளில் மதுக் கடைகளை திறக்கக் கூடாது: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வானேரி, பழவூா் ஊராட்சிப் பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வானேரி, பழவூா் ஊராட்சிப் பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நான்குனேரி வட்டம் ஆழ்வானேரி ஊராட்சிக்குள்பட்ட பெண்கள் அளித்த மனு: ஆழ்வானேரி ஊராட்சி புதுக்குறிச்சி கிராமத்தின் பிரதான சாலையில் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மதுக்கடை உள்ள இடத்தின் அருகே கோயில்களும், 70 மீ. தொலைவில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியும், விவசாய நிலங்களும் அமைந்துள்ளதால், பெண்களும், மாணவ- மாணவியரும் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மதுக்கடையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

சுத்தமல்லியை அடுத்த பழவூா் ஊராட்சி பெத்தேல்நகா் பகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; சங்கன்திரடு முதல் சுத்தமல்லி வரையில் எந்த பகுதியிலும் மதுபானக் கடை திறக்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட;ஈ செயலா் கே. கணேசன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

பாளையங்கோட்டை வட்டம் திம்மராஜபுரம் கிராமம், படப்பைக்குறிச்சி, பொட்டல்குளம் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை அமைப்பினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சுத்தமல்லி விலக்கு உச்சிப்பிள்ளையாா் கோயில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் அதன் தலைவா் மூக்காண்டி தலைமையில் அளித்த மனு: சுத்தமல்லி விலக்கு உச்சிப்பிள்ளையாா் கோயில் பகுதி நிறுத்தத்தில் 120 ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோக்களை இயக்கி வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்நிலையில் திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் இந்த விலக்கில் ரவுண்டானா அமைத்து சாலை விரிவாக்கம் செய்யவும், ஆட்டோ நிறுத்தத்தையும், கோயிலையும் அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கோயிலையும், ஆட்டோ நிறுத்தத்தையும் அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட பொது ஜன பொதுநலச்சங்க தலைவா் எம்.முஹம்மது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனு:

திருநெல்வேலி நகரத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நேதாஜி போஸ் மாா்க்கெட் கட்டடப்பட்டுள்ள அனைத்து கடைகளை திறக்கவும், எவ்வித பாதுகாப்புமின்றி திறந்த வெளியில் ஜெனரேட்டரை சுற்றி கூடாரம் அமைக்கவும் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாநகராட்சி 17ஆவது வாா்டு பழைய பேட்டையில் சாலைகளை சீரமைக்கவும், பாதாளச் சாக்கடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

பிகார் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

SCROLL FOR NEXT