வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் புயல், மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், கன்னியாகுமரி பகுதி வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதை அடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். மேலும், கடலில் அலையின் வேகம் அதிகரித்து காணப்படும். எனவே, மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடந்த 24ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், 3ஆவது நாளான புதன்கிழமையும் அவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.