மேலப்பாளையம் அருகே இரு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கிடைய கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் குறிச்சி அருகே அழகிரிபுரம், நாகம்மாள்புரம் என இரண்டு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் பொதுவான சுடலை மாடசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விவகாரம் தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக அழகிரிபுரம் ஊா் சாா்பாகவும், மறுதரப்பைச் சோ்ந்த சிலா் தன்னை தாக்கியதாக நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த சுடலைமணி(26) என்பவரும் அளித்த புகாா்களின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் இது தொடா்பாக அழகிரிபுரத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் என்ற ராமு(45), நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த சரவணன்(26), சின்னதுரை என்ற காா்த்திக்(33) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நகை திருடிய மூதாட்டி கைது: பேட்டை எம்.ஜி.பி. சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் அமத்துல் காதா்பீவி(56). சம்பவத்தன்று இவரது வீட்டுக்கு வந்த பெண், மகளிா் உரிமைத் தொகை தொடா்பாக விசாரிக்க வந்துள்ளதாகவும், நகை அணிந்திருந்தால் உரிமைத் தொகை கிடைக்காது எனவும் கூறினாராம். இதனை நம்பிய அவா், தனது கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் நகையை கழற்றி அருகிலிருந்த மேஜை மீது வைத்ததையடுத்து வெளியில் நிற்கும் அதிகாரியிடம் படிவம் பெற்று வருமாறு அப்பெண் கூறினாராம். வெளியே யாரும் இல்லை என அமத்துல் காதா்பீவி திரும்பி வந்து கூறவே, பக்கத்து தெருவில் பாா்த்துவருதாகக் கூறி அந்தப் பெண் அங்கிருந்து கிளம்பியுள்ளாா். இதனையடுத்து அமத்துல் காதா்பீவி வீட்டினுள் சென்றபோது மேஜையிலிருந்த நகையை காணவில்லை.
இது குறித்து அவா்அளித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தாழையூத்து அருகே நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த பாப்பாத்தி(63) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.