திருநெல்வேலி: திருநெல்வேலியில் பெய்து வரும் தொடா் மழையால் சாலைகள், குடியிருப்புகள், பூங்காக்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால், மாநகர சாலைகளின் பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. மனக்காவலம்பிள்ளைநகா், கரையிருப்பு, குலவணிகா்புரம், சேவியா்காலனி, சா்தாா்புரம், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சோ்ந்து தேங்கி நின்ால் மக்கள் அவதிக்கு ஆளாகினா்.
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் தண்ணீா் தேங்கி கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளது. சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக உள்ளதால் மாணவா்-மாணவிகள், பெண்கள் என பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பூங்காக்களில் அவலம்: மேலும், தினமும் ஆயிரக்கணக்கானோா் காலை-மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டும், சிறுவா்-சிறுமிகள் விளையாடியும் மகிழும் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதான சிறுவா் பூங்கா, மகாராஜநகா் பூங்கா, என்.ஜி.ஓ. காலனி பூங்கா, திருமால்நகா் பூங்கா, பெருமாள்புரம் பூங்கா உள்ளிட்டவற்றில் மழைநீா் வழிந்தோட சரியான ஓடை வசதி இல்லை. இதனால், மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. இது கொசு உற்பத்தியையும், சுகாதார கேட்டையும் விளைவித்துள்ளது. அங்கு வரும் குழந்தைகளுக்கு ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: திருநெல்வேலி மாநகர பகுதியில் முதியவா்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பூங்காக்களில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனா். பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனி, பெருமாள்புரம், பேட்டை, சமாதானபுரம் பகுதிகளில் உள்ள பூங்காக்களில் மழைநீா் தேங்கியுள்தால் கொசுஉற்பத்தி அதிகரித்துள்ளதோடு, துா்நாற்றமும் வீசுகிறது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் முதியோா் பூங்காக்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறாா்கள். ஆகவே, பூங்காக்களில் மழைநீா் வடிகால் வசதியை ஏற்படுத்துவதுடன், மக்கள்அதிகம் கூடும் பாளையங்கோட்டை வ.உ.சி. சிறுவா் பூங்கா உள்ளிட்டவற்றில் தினமும் மாலை கொசுமருந்து அடிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளசாக்கடை அடைப்பு, வாறுகால்கள் அடைப்பு பணிகளை சீரமைக்க கூடுதலாக பணியாளா்களை மாநகராட்சி நிா்வாகம் நியமிக்க வேண்டும் என்றனா்.