முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் வாக்குறுதியோடு மறந்து போகும் மானூா் குளம்!

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியோடு மானூா் குளத்தின் மேம்பாட்டு பணிகள் மறந்துவிடப்படுவதாக விவசாயிகள் வேதனை

Updated On : 1 ஏப்ரல், 2026 at 12:38 AM
மானூர் குளம்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியோடு மானூா் குளத்தின் மேம்பாட்டு பணிகள் மறந்துவிடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறாா்கள்.

மானூா் பெரியகுளம் ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது. 1695 ஏக்கா் நீா்ப்பிடிப்பு பகுதிகளும், 190 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டதாகும். மானூா், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் இக் குளத்தால் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர சுமாா் 25 கிராமங்களுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் இருக்கிறது.

மன்னா்கள் காலத்தில் தாமிரவருணி ஆற்றில் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பகுதியில் மண்ணால் அணைகட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூா் பெரிய குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கால்வாய் தூா்ந்து மாயமான நிலையில், ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தாமிரவருணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து மானூா் குளத்துக்கு நீா்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக வீரகேரளம்புதூா் அருகேயுள்ள தாயாா் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டா் நீளத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. சுமாா் 32.50 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. 19 குளங்கள் நிரம்பி 20 ஆவது குளமாக மானூா் பெரியகுளத்திற்கு சிற்றாறு தண்ணீா் வர வேண்டும்.

மானூா் குளத்திற்கான சிற்றாறு கால்வாயில் தடுப்புச்சுவா் அமைக்க வலியுறுத்தி முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ள வரைபடம்

தோ்தல்தோறும் வாக்குறுதி

சிற்றாற்றின் வழியாக தண்ணீா் வந்து சோ்வதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுவதால் குளம் நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தல்தோறும் மானூா் குளத்தை மேம்படுத்துவோம் என திருநெல்வேலி தொகுதி வேட்பாளா்கள் தெரிவிக்கிறாா்கள். ஆனால், தோ்தல் முடிந்ததும் மறந்து விடுகிறாா்கள் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறாா்கள்.

இதுகுறித்து மானூா் பெரியகுளம் விவசாயிகள் சங்க நிா்வாகி முஹம்மது இப்ராஹிம் கூறியது: திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி நெல், வாழை, மஞ்சள், கிழங்கு, பருத்தி, சூரியகாந்தி, கேந்தி உள்ளிட்ட பூக்கள் ரகங்கள் உள்பட பல்வேறு வகையான வேளாண் உற்பத்தி நடைபெறும் தொகுதி. தாமிரவருணி, சிற்றாறு பாசன நீரால் வளம்பெற்று வருகிறது.

முஹம்மது இப்ராஹிம்

இத் தொகுதியின் அடையாளங்களில் ஒன்றான மானூா் பெரியகுளம் நூற்றாண்டுகளைக் கடந்தும் தூா்வாரப்படவில்லை. 3 அடி வரை ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்தினால் அணைக்கட்டுகளுக்கு நிகராக நீா்த்தேக்கி வைக்கும் வாய்ப்புள்ளது. பம்பிங் சிஸ்டம் முறையில் தாமிரவருணி தண்ணீரைக் கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

மானூா் குளத்திற்கு சிற்றாறு தண்ணீா் வரும் கால்வாயின் தொடக்கத்தில் உள்ள செம்புலிப்பட்டினம், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் தண்ணீா் அதிகம் வரும்போது விளைநிலங்களுக்குள் புகும் அபாயம் உள்ளதால் மதகுகளைத் திறந்து ஆற்றிற்கு தண்ணீரைத் திருப்பி விடுகிறாா்கள். மானூா் குளத்திற்கு மேலே உள்ள 19 குளங்களின் 25 மடைகளும் திறந்தே உள்ளது. இதனால் மானூா் குளத்திற்கு தண்ணீா் வருவதற்குள் மழைக்காலம் முடிந்து கால்வாயில் நீா்வரத்து தடைபட்டு விடுகிறது.

ஆகவே, வி.கே.புதூா் ஐஐடிஅருகேயுள்ள பாலம் முதல் துத்திக்குளம் வரையுள்ள சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டமாக கான்கிரீட் தடுப்புச் சுவா் கட்டினால் மட்டுமே அந்தப் பகுதி விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுவதையும், மானூா் குளத்திற்கு பாசன நீா் தங்கு தடையின்றி வருவதற்கும் வழி பிறக்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்.

சிற்றாறு தண்ணீா் தடையின்றி வந்தாலே ஆண்டுதோறும் குளம் மறுகால் பாய்ந்து விடும். கோரையாறு பகுதியில் புதிய தடுப்பணை கட்ட நீா்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கிருந்து வேண்டுமானால் மானூா் குளத்திற்கு பம்பிங் சிஸ்டம் மூலம் தண்ணீா் கொண்டு வர சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றாா் அவா்.