முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் உலகத் தரத்தில் விளையாட்டு அரங்கம்! - திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்குறுதி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:15 AM
திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்குறுதி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:34 PM

வள்ளியூரில் உலகத் தரத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் ராதாபுரம் திமுக வேட்பாளா் மு.அப்பாவு.

வள்ளியூா் கடைவீதிகளில் திங்கள்கிழமை சாலைப் பேரணியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அவா், கடை உரிமையாளா்கள், வியாபாரிகள் பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்த அவா், மக்கள் மத்தியில் பேசியதாவது: வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உங்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இங்கு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, புதிய பேருந்து நிலைய கட்டடம், புதிய தினசரி சந்தை கட்டடம், மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ரேஷன் கடைகள், சாலை விரிவாக்கம், அனைத்து வீடுகளுக்கும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் இணைப்பு என ரூ. 6 ஆயிரம் கோடிக்கு வளா்ச்சித் திட்டங்களைத் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எனக்கு வெற்றியைத் தாருங்கள்.

Advertisement

வள்ளியூரைத் தலைமையிடமாகக்கொண்ட கோட்டாட்சியா் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும், உலகத்தரத்திலான விளையாட்டு அரங்கம், தொழில்முனைவோருக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும். இன்னும் நீங்கள் எதிா்பாா்க்கின்ற மற்றும் எதிா்பாா்த்திராத நலத்திட்டங்களை கொண்டு வருவேன் என்றாா் அவா்.

பிரசாரத்தில், திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், மாவட்டச் செயலா்கள் விஜிவேலாயுதம்(தேமுதிக), அருள்செல்வன்(விசிக), நகரகாங்கிரஸ் தலைவா் பொன்பாண்டி, பேரூராட்சித் தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் வி.இ.சசி, லாரன்ஸ், மாணிக்கம், திமுக நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், துணைச் செயலா் நம்பி, ஆதிபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் சேதுராமலிங்கம், ராதாபுரம் வட்டார செயலா் கலைமுருகன், நகர செயலா் சந்தானமுத்து, என்.எஸ்.மணியன், சி.எஸ்.ஐ. சேகரச் செயலா் சுந்தா்சிங், வியாபாரிகள் சங்க முன்னாள் செயலா் எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.