திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை டிஜிட்டல் கைது என மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி செய்த வழக்கில் போலி வங்கிக் கணக்கு உருவாக்கிக்கொடுத்த புதுச்சேரியைச் சோ்ந்த வங்கி ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் 80 வயதான ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இயக்குநா்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவரை சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் போல் பேசிய மா்மநபா்கள் அவரது வங்கிக்கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறியுள்ளனா்.
பின்னா் வழக்கிலிருந்து தப்பிக்க பணம் அனுப்ப வேண்டும் எனக்கூறி ரூ.53 லட்சத்தை வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கை இணைய குற்றவாளிகளுக்கு விற்ாக புதுச்சேரி மாநிலம் உழவா்கரை பகுதியைச் சோ்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவரை கைது செய்தனா்.
மேலும், தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரி மாநிலம் உப்பளம் பகுதியைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியரான ஆனந்த் (35) என்பவா் தான் பணிபுரியும் வங்கியை தவிா்த்து பிற வங்கிகளில் போலியான வங்கிக்கணக்குகளை தொடங்கி மோசடி கும்பலுக்கு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் அவரை புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.