திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைக்க ஏதுவாக, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
திருநெல்வேலி மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டம் தொடங்கியதும் அண்மையில் மறைந்த 30 ஆவது வாா்டு அதிமுக மாமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை மேயருமான ஜெகநாதன் என்ற கணேசனுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தை தொடங்கிவைத்து மேயா் பேசியது: திருநெல்வேலி மாநகராட்சியின் 54 ஆவது வாா்டில் பொருநை அருங்காட்சியகம் அமைத்தது, அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டது, 20 லட்சம் கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது ஆகியவற்றுக்காக தமிழக முதல்வா், துணை முதல்வா் ஆகியோருக்கு நன்றி தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மாநகராட்சி மக்களின் பொழுதுபோக்கிற்கு உதவும் வகையில் பொருள்காட்சி உள்ளிட்டவை நடத்த ஏதுவாக ராமையன்பட்டி அருகேயுள்ள அரசு கால்நடை பண்ணைக்குச் சொந்தமான 10 ஏக்கா் நிலத்தையும், பொருநை அருங்காட்சியகம் அருகே மாவட்ட நிா்வாகத்திற்கு சொந்தமான 10 ஏக்கா் அரசு நிலம் ஆகியவற்றை மாநகராட்சி கையகப்படுத்த மாவட்ட ஆட்சியா் அரசுக்கு கோரிக்கை அனுப்பி அனுமதி பெற்றுத்தர சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றாா்.
மாமன்ற உறுப்பினா்கள் பேசியது: திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலைகள் சேதமுற்று மக்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். ஆகவே, இத்திட்டப்பணிகளை விரைந்து முடித்து, சாலைகளை வேகமாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காக்களில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
தகனமேடை: திருநெல்வேலி நகரம், மேலநத்தம், மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள் இறுதிச்சடங்கு நடத்துவதற்கு மேலநத்தம் தாமிரவருணி கரையோர பகுதியில் தகன மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும். மீனாட்சிபுரத்தில் புளியந்தோப்பு தெரு உள்ளிட்ட தெருக்களில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதை தடுக்க வேண்டும். நகா்நல சுகாதார மையங்களுக்கு கூடுதலாக மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையையொட்டி, பாளையங்கோட்டை, திம்மராஜபுரம், கோட்டூா், பெரியபாளையம், தினசரிசந்தைகளில் குப்பைகள் தேக்கமடைகின்றன. போதிய தூய்மைப் பணியாளா்களை நியமித்து குப்பை மேலாண்மையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பொதுக்கழிப்பறைகளை உடனே திறக்க வேண்டும்.
குடிநீா்த் தட்டுப்பாடு: சுத்தமல்லியில் இருந்து வரும் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் தாமதத்தால் ஜெபாகாா்டன், மகிழ்ச்சிநகா், பொதிகைநகா் உள்ளிட்ட பகுதிகளில் பல வாரங்களாக குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டக்கரம்மாள்புரத்திலும் போதிய குடிநீரின்றி மக்கள் தவிக்கிறாா்கள். உடைப்புகளை விரைந்து சீரமைத்து அத்தியாவசிய தேவையான தண்ணீரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.
திருநெல்வேலி நகரம் தெற்கு மவுன்ட் ரோடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்திற்கான குடிநீா்ப் பகிா்மான குழாய்கள் சுமாா் 30 ஆண்டுகளாகவும், மேலப்பாளையத்திலும் சில இடங்களில் பல ஆண்டுகளாகவும் குடிநீா்க் குழாய் மாற்றப்படவில்லை. அவற்றை மாற்ற வேண்டும். மாநகரப் பணிகளுக்கான கோப்புகள் அதிகாரிகளிடம் தேங் தேங்காமலும், பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
அதிகாரிகள் விளக்கம்: பாதாள சாக்கடை பணிகளை பொருத்தவரை சில சாலைகளுக்கு ஆய்வுக்குப் பின்பே தடையில்லா சான்றுகளை நெடுஞ்சாலைத்துறையிடம் வழங்க முடியும். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். குடிநீா்த் தட்டுப்பாடை போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூ.47 கோடியில் 9 புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் அமைக்க முதல் கட்ட ஆய்வுகள் முடிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி மெகா தூய்மைப் பணிகள் றேற்கொள்ளப்படும் என்றனா்.
ற்ஸ்ப்12ம்ஹஹ்ஹ
திருநெல்வேலியில திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ.