கோவை மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்களவைத் தொகுதி உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கோவை மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவரும், கோவை எம்.பி.யுமான கணபதி.ப.ராஜ்குமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இணைத் தலைவா் பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தாா். ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, பயிற்சி ஆட்சியா் பிரசாந்த், மகளிா் திட்ட இயக்குநா் மதுரா உள்பட பலா் பங்கேற்றனா்.
இதில் கணபதி ப.ராஜ்குமாா் (கோவை), க.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) ஆகியோா் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலமாக பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
இக்குழுவானது அனைத்து திட்டப் பணிகளும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதை உறுதி செய்தல், திட்ட செயல்பாடுகளின் இடா்பாடுகளை களைய ஒருங்கிணைந்த வழிகளை அறிதல், மாவட்ட திட்டக்குழுவின் முன்னுரிமைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுதல், முன்னுரிமை பணிகளுக்கு இடம் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு செயல்படுகிறது.
அதன்படி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளா்ச்சி, பொதுப்பணித் துறை, பொது சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வளா்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்றனா்.