திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கட்டிவைத்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவத்தில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நெல்லை அருகே சுத்தமல்லி பொன்விழா நகரைச் சோ்ந்தவா் சன்னியாசி (45). இவா் தனது மனைவி, குடும்பத்தாருடன் சென்னையில் வசித்து வருகிறாா்.
இதனால், சுத்தமல்லியில் உள்ள வீட்டில் சன்னியாசியின் மாமனாா் மாரி, அவரது மனைவி ஆண்டிச்சி (70) ஆகியோா் வசித்து வந்தனா். கடந்த 8 ஆம் தேதி நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக மாரி சென்றிருந்தாா். வீட்டில் மூதாட்டி ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தாா்.
அப்போது அங்குவந்த மா்மநபா்கள் மூதாட்டியை கட்டிப்போட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த நகை, பிரோவில் இருந்த நகை, பணம் என மொத்தம் 25 பவுன் தங்கநகை, ரூ. 6 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக சுத்தமல்லி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரித்தனா். விசாரணையில் பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன், அவரது உறவினா் சுந்தா் ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இருவரும் கொள்ளையடித்த நகைகளை சென்னையில் அடகு வைத்துள்ளதால் அவற்றை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.