பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியிடம் தகராறு செய்த ஆயுதப்படை காவலா் கைது செய்யப்பட்டாா்.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், சோழநாயனாா் தெருவைச் சோ்ந்தவா் மாசிலாமணி மகன் ஜாய்சன் (38). இவா், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா், சில நாள்களுக்கு முன்பு வண்ணாா்பேட்டை, தெற்கு புறவழிச் சாலையில் உள்ள திரையரங்கில் படம் பாா்க்க சென்றாா். அவரது இருக்கைக்கு முன்பாக உள்ள வரிசையில் சமாதானபுரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி தனது சகத் தோழிகளுடன் படம் பாா்த்துக்கொண்டிருந்தாா்.
அப்போது ஜாய்சனுக்கும், அந்த மாணவிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னா், வாக்குவாதம் முற்றவே, அங்கிருந்தவா்கள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். எனினும், அந்த மாணவி சென்ற பேருந்தை இருசக்கர வாகனத்தில் ஜாய்சன் பின்தொடா்ந்தாா்.
சமாதானபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இறங்கி நடந்துசென்ற மாணவியிடம் சென்ற ஜாய்சன் மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாணவி தரப்பில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜாய்சனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.