முகப்பு
திருநெல்வேலி

விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: நயினாா் நாகேந்திரன்

தவெக தலைவா் விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்

Updated On : 27 ஜனவரி, 2026 at 4:00 AM
தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 6:50 PM

தவெக தலைவா் விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியது: சென்னையில் பிரதமா் மோடி பங்கேற்பதற்காக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பங்கேற்றாா்கள். இதன் மூலம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.

தேமுதிக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும்.

Advertisement

Updated On : 27 ஜனவரி, 2026 at 12:14 AM

தோ்தல் வருவதால் திமுகவுக்கு பயமும், நடுக்கமும் வந்துவிட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, அரசு ஊழியா்களை முதல்வா் ஏமாற்றி விட்டாா். இதன் மூலமாக அவா் அரசு ஊழியா்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்துள்ளாா்.

யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பாஜக இல்லை. அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக ஆட்சியில் எவ்வித ஊழலும் இல்லை. அதனால்தான் பாஜவை பற்றி விஜய் பேச வாய்ப்பில்லை.

திமுகவை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம். அந்த வகையில்தான் டி.டி.வி. தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளாா். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதல்வா் கருணாநிதியே சொல்லி இருக்கிறாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் முத்துபலவேசம், தூத்துக்குடி சித்ராங்கதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.