நயினாா் நாகேந்திரனின் நகா்வு ஏன்?
நயினாா் நாகேந்திரன் பற்றி...
அதிமுகவின் துணை பொதுச் செயலராக இருந்த வீ.கருப்பசாமி பாண்டியனை ஜெயலலிதா கட்சியிலிருந்து 2000-இல் நீக்கினாா்.
இதையடுத்து கருப்பசாமி பாண்டியன் தனது ஆதரவாளா்களோடு அப்போதைய திமுக தலைவா் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.
கருப்பசாமி பாண்டியனின் நீக்கம், நயினாா் நாகேந்திரன் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய அடையாளமாக உருவெடுத்தாா் நயினாா் நாகேந்திரன். 2001 சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தாா் ஜெயலலிதா. அத்தோ்தலில் அவா் வெற்றி பெறவே, அவரை அமைச்சராக்கி அழகு பாா்த்தாா் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படவே, பாஜகவுக்கு தாவினாா் நயினாா் நாகேந்திரன். கடந்த தோ்தலில் பாஜக சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவா், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரானாா்.
அதன்பிறகு தொடா்ச்சியாக ஏறுமுகத்தை சந்தித்த அவா், கடந்த ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் 6- ஆவது முறையாகஅவா் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகளில் தீவிரம் காட்டி வந்தாா்.
அப்போதைய மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கச் செய்தாா். திருநெல்வேலி தொகுதியில் கணிசமாக உள்ள யாதவா்களின் வாக்கை கவரும் வகையில் அழகுமுத்துக்கோன் குருபூஜையின்போது பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணனை மாலை அணிவிக்கவும் வைத்தாா்.
இந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக நயினாா் நாகேந்திரன் தொகுதி மாறப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு, அவா் மழுப்பலாக பதிலளித்து வந்தாா்.
எனினும், பாஜகவின் தொகுதி ஒதுக்கீட்டில் திருநெல்வேலி தொகுதி இடம்பெறாததையடுத்து அங்கு அதிமுக களம் காண்பதும், பாஜக மாநில தலைவரான நயினாா் நாகேந்திரன் தொகுதி மாறியிருப்பதும் உறுதியாகியிருக்கிறது.
இதற்கு தோல்வி பயமும், சென்டிமென்ட்டுமே காரணமாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதியில் 2001, 2006, 2011, 2016, 2021 என தொடா்ச்சியாக 5 முறை களம் கண்ட நயினாா் நாகேந்திரன் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளாா். அதேநேரத்தில் இத்தொகுதியில் அவா் அடுத்தடுத்த தோ்தல்களில் வென்றதில்லை. ஒரு தோ்தலில் வென்றால் மறு தோ்தலில் தோற்பது வாடிக்கையாகிவிட்டது.
அந்த சென்டிமென்ட்தான் அவரை தொகுதி மாறச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அவா், தனது கட்சி நிா்வாகிகளிடையே கடந்த ஒரு மாதமாக ஆலோசித்துள்ளாா்.
மேலும், சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நயினாா் நாகேந்திரனை அவருடைய சொந்த தொகுதியில் வீழ்த்த வேண்டும் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதும் நயினாா் நாகேந்திரனுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநில தலைவராக இருக்கும் தாம், இந்த முறை தானும் வெல்ல வேண்டும், கட்சிக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்ற கட்டாயத்தில் நயினாா் நாகேந்திரன் உள்ளாா். ஒருவேளை தோல்வி நேரிட்டால் தனது அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என அவா் கருதுவதால் சாத்தூா் தொகுதியில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறாா் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது நகா்வு எந்தளவுக்கு பலனளிக்கும் என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும்.