திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே செவ்வாய்க்கிழமை டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
வள்ளியூா் ஊற்றடி பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி-செல்வகனி தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன் (22). இவா், தனது தாயாா் செல்வகனியுடன் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
நான்குனேரி அருகே ஒரு திருமண வீட்டில் தனது தாயாரை இறக்கிவிட்ட பிறகு, திருநெல்வேலியில் உள்ள நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்று கொண்டிருந்தாா்.
திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் மூன்றடைப்பு அருகே வாகைகுளம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டா் எதிா்பாராதவிதமாக தமிழ்ச்செல்வன் மீது மோதியது.
இதில், சாலையில் விழுந்த தமிழ்ச்செல்வன் மீது டிராக்டா் சக்கரம் ஏறி இறங்கியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, மூன்றடைப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரான நான்குனேரி அருகே நெடுங்குளத்தைச் சோ்ந்த முத்துவை (40) கைது செய்தனா்.