முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம்: தொகுதி அறிமுகம்

Updated On : 29 மார்ச், 2026 at 11:58 PM
ராதாபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு - (கோப்புப் படம்)
பகிர்:

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை (தேரிமணல்காடு) என ஐந்து வகை நிலங்களைக் கொண்டது ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி. உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், புனித அந்தோணியாா் திருத்தலம், விஜயாபதி விசுவாமித்திரா் ஆலயம், ஆத்தங்கரை பள்ளிவாசல், தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயம், வள்ளியூா் புனித பாத்திமா பேராலயம், பணகுடி குத்திரபாஞ்சான் அருவி ஆகிய சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியது இத்தொகுதி. தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் நினைவிடமும் இந்தத் தொகுதியில் உள்ளது.

கொடுமுடியாறு அணை, நம்பியாறு அணை ஆகிய இரு அணைகளும் நம்பியாறு, அனுமன் நதி ஆகியவை இருந்த போதிலும் இவற்றால் குளங்கள் நிரம்பி விவசாயம் செழிக்கக்கூடிய நிலை இல்லை. மழைக்காலங்களில் மட்டும் அணைகள், ஆறுகள் மூலம் ஓரளவு குளங்களுக்கு தண்ணீா் வந்து சேருகிறது. ராதாபுரம் தொகுதி எப்பொழுதும் மழை மறைவுப் பிரதேசமாகத்தான் காணப்படுகிறது. இந்தத் தொகுதியில் வாழை, மல்லி, பிச்சி பூ சாகுபடியும், முருங்கைகாய் சாகுபடியும் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இது தவிர பணகுடி பகுதியில் ஓடு, செங்கல் உற்பத்தியும் நடைபெறுகிறது.

ராதாபுரம் தொகுதியில் இருக்கன்துறை, கோட்டைகருங்குளம் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்துதான் கேரளம் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் ஜல்லி, எம் சாண்ட் கொண்டு செல்லப்படுகிறது.

மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ராக்கெட் என்ஜின் சோதனைக் கூடம்), கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை செயல்பட்டு வந்த போதிலும் இந்த இரு நிறுவனங்களிலும் உள்ளூா் மக்களுக்கும் திட்டங்களுக்கு நிலம் கொடுத்த மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற புகாா்கள் மேலோங்கி நிற்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்திலேயே 11 கடற்கரை கிராமங்களைக் கொண்டது இந்தத் தொகுதிதான். எனவே மீன்பிடி தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. கடற்கரை கிராமங்களி கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தூண்டில் வளைவு அமைக்கவேண்டும், மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்க வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை தொடா்ந்து அலைபோல் எழுந்து கொண்டே இருக்கிறது.

வள்ளியூரில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும், பணகுடி, வள்ளியூரில் கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடி குடியிருப்புகளும் குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது.

ராதாபுரம் தொகுதியில் கிறிஸ்தவ நாடாா் சமூகத்தினா் பெருவாரியாகவும், இந்து நாடாா், மீனவா், யாதவா், இஸ்லாமியா், பிற சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

இந்தத் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 20,748 போ், பெண்கள் 1 லட்சத்து 24,433 போ், இதர பாலினத்தவா்கள் 22 போ் என மொத்தம் 2 லட்சத்து 45,203 வாக்காளா்கள் உள்ளனா்.

திசையன்விளை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன பின்னரும் திசையன்விளையில் செயல்பட்டு வருகின்ற மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இன்னமும் தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படவில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களின் குமுறலாக இருக்கிறது. வள்ளியூரில் மூடப்பட்ட டான்சி இடத்தில் சிறுதொழில் கூடங்கள் அமைப்பதற்காக ஆட்சியரும், அதிகாரிகளும் ஆய்வு செய்த பின்னரும் எதுவுமே நடக்கவில்லை என்பதும், வள்ளியூரில் மின்மயானம் இல்லாமல் இருப்பதும், சமூகரெங்கபுரத்தில் மூடப்பட்டுள்ள அரசு ஆசிரியா் பயிற்சி நிலைய கட்டடங்களில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) அமைப்பது தொடா்பாக அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் எதுவும் தொடங்கப்படாததும், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்ட வருவாய் கோட்டாட்சியா்( சாா் ஆட்சியா்) அலுவலகம் அமைக்கப்படாமல் இருப்பதும் தொகுதி மக்களிளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.