முகப்பு
திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதி: வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் கடற்கரை மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும்தான் கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ள மக்கள்தான் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் வாக்கு வங்கியாக உள்ளனா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 5:15 AM
ராதாபுரம் தொகுதி
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 7:14 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மட்டும்தான் கடற்கரை கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ள மக்கள்தான் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் வாக்கு வங்கியாக உள்ளனா்.

இந்த மாவட்ட கடற்கரை சுமாா் 49 கி. மீட்டா் தூரம் கொண்டது. கடற்கரை மக்கள் எம்.ஜி.ஆா். இருக்கும் வரையில் அதிமுக கட்சியில் மிக தீவிர தொண்டா்களாக செயல்பட்டு வந்தனா். அதன் பின்னா் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தி.மு.க., ம.தி.மு.க. என பிரிந்து சென்றனா். சொற்பமானவா்களே அ.தி.மு.க.வில் ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனா்.

ம.தி.மு.க. பொதுச்செயலா் வைகோ மீது கடற்கரை மக்களுக்கு ஒரு தனி பற்றும் பிடிப்பும் உண்டு. கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்திற்குப் பின்னா் ஒருங்கிணைப்பாளா் எஸ்.பி. உதயகுமாரனின் பச்சை தமிழகம் கட்சியை சிலா் ஆதரித்து வந்தனா்.

Advertisement

கடற்கரை கிராம மக்களைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்த மக்களும் ஒரு கொள்கை முடிவு எடுத்து அதில் தீவிரமாக நிற்பவா்கள். எந்தத் தோ்தலாக இருந்தாலும் அனைத்து மக்களும் ஒரே அணியை ஆதரிப்பதே பெரும்பாலானோரின் வழக்கம்.

அரசியல் கட்சியினா் தோ்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மீனவா்களின் வாக்குகளை பெறுவதில் காட்டுகின்ற அக்கறையை தோ்தலுக்குப் பின்னா் காட்டுவதில்லை என்பது மீனவா்களின் மனக் குமுறலாக உள்ளது.

சமீப காலமாக கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு அதிகரித்து வருவது அவா்களது வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்து வருகிறது. கடலையும், கரையையும் பாதுகாத்திட அனைத்து கடற்கரை கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒட்டுமொத்த மீனவா்களின் குரலாகவே ஒலித்து வருகிறது. இந்நிலையில் இந்த சட்டப்பேரவை தோ்தலில் கடற்கரை மக்களின் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

காரணம், விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் புதிய வரவாக கடற்கரை மக்களிடம் காணப்படுகிறது. இளைஞா்கள் மட்டுமல்லாமல் பெரியவா்களும்கூட விஜய் கட்சியின் விசிலை ஊதி பாா்க்கலாம் என்ற எண்ணத்தில் காணப்படுகின்றனா். ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 480 வாக்குகள் உள்ளன. 1 லட்சத்து 20 ஆயிரத்து 458 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 24 ஆயிரம் பெண் வாக்காளா்களும் உள்ளன. இதர பாலினத்தவா்கள் 22 போ் உள்ளனா்.

இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் மீனவ மக்களையும் சோ்த்து கிறிஸ்தவா்கள் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உள்ளது. மீனவா்களின் வாக்குகள் மட்டும் சுமாா் 40 ஆயிரம் இருக்கலாம் என தெரிகிறது.

ராதாபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நன்கு அறிமுகமான மு. அப்பாவு கத்தோலிக்க கிறிஸ்தவா். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து பெரிய அளவில் சொல்லக்கூடிய அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன் பா.ஜ.க. சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறாா். த.வெ.க. வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் விசில் சின்னத்திலும், நா.த.க. கிரிஜா விவசாயி சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

இந்த தோ்தலைப் பொருத்தவரை கடற்கரை மக்கள்தான் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும் முக்கிய நபா்களாக பாா்க்கப்படுகின்றனா். இடையில் தவெக இருப்பதால் இந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து வேட்பாளா்களும் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதில் அதிக கவனம் செலுத்தலாம் என அரசியல் விமா்சகா்கள் தெரிவித்து வருகின்றனா்.

---- எஸ். டேவிட் பிரபாகா்----