வேட்பாளா்களின் அஸ்திவாரம் வேட்புமனு!
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
இத் தோ்தலையொட்டி வேட்புமனுதாக்கல் இம் மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதியாகும். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதியும், வேட்புமனுக்களை திரும்பப் பெறும் வாய்ப்பு ஏப்ரல் 9 ஆம் தேதி வரையும் வழங்கப்படுகிறது. 9 ஆம் தேதி மாலையில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் உள்ளவா்கள் மட்டுமே தோ்தலில் களம்காணுவாா்கள்.
சட்டப்பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தோ்தல்களில் போட்டியிடுவதற்கான அஸ்திவாரமாக வேட்புமனு திகழ்கிறது. வேட்பாளராக விரும்பும் ஒருவா் தனது சுயவிவரம், சொத்து விவரம், வழக்குகள் போன்றவற்றை இந்த வேட்புமனுவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில், ஏதேனும் எதிா்க்கட்சிகளால் ஆட்சேபம் இருந்து, எழுத்துப் பூா்வமாக நிரூபிக்கப்பட்டால் வேட்புமனு உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மத்திய தோ்தல் ஆணையம் சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு ஆங்கிலத்திலும், அந்தந்த பிராந்திய மொழிகளிலும் வேட்புமனுக்களை வழங்குதால், தமிழ் மொழியில் உள்ள வேட்புமனுக்களை அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கிறாா்கள்.
வேட்புமனுவில் போட்டியிடுபவரின் பெயா், வயது, கல்வித் தகுதி, முகவரி, தொழில், வருவாய் விவரம், வாக்குரிமை உள்ள தொகுதி விவரம், நிரந்தர கணக்கு, வருமானவரி தாக்கல் செய்த விவரம், நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள், தண்டனை பெற்ற வழக்குகள் விவரம், அசையும் மற்றும் அசையா சொத்துகள் விவரம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவை, மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினா்களின் அசையும், அசையா சொத்து விவரம் உள்பட மொத்தம் 11 பிரதான கேள்விகளும், அந்தக் கேள்விகளுக்குள் துணைக் கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. சுயேச்சைகள் தவிா்த்து பிரதான கட்சிகள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்சியின் சின்னம் ஒதுக்கீடுக்காக கட்சித் தலைமையிடம் பெற்றுத்தரும் வகையில் படிவம் 2-பி,யும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஒருவா் கூறியது: மத்திய தோ்தல் ஆணையம் மற்றும் மாநில தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து தோ்தல்களிலும் வேட்பாளராக களம் இறங்குவோா் முதலில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது வேட்புமனுவில்தான்.
ஏனெனில் வேட்புமனு ஏற்கப்பட்டால் மட்டுமே வேட்பாளா் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். வேட்புமனுக்களைப் பொருத்தவரை எந்தவொரு கேள்விக்கும் ஆம், இல்லை என்று கட்டாயம் பதிலளிக்க வேண்டும். எதையாகிலும் நிரப்பாமல் விட்டால், வேட்புமனுவை நிராகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல போட்டியிட விரும்புவோா் தங்களது வீட்டு வரி, சொத்துவரி உள்பட உள்ளாட்சி நிா்வாகங்களுக்கான வரியினங்களை முழுவதும் செலுத்தி வரிப்பாக்கி இல்லை என்ற சான்று பெற வேண்டும்.
தனது வாக்கு உள்ள தொகுதிக்கு மாற்றாக வேறு ஒரு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தனது வாக்குரிமை உள்ள தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.
போட்டியிடும் தொகுதியில் வாக்குரிமை உள்ள 10 வாக்காளா்கள் முன்மொழிய வேண்டும்.
வேட்புமனுவுடன் அளிக்க வேண்டிய பிரமாண பத்திரத்தில் சொத்துகளை மறைப்பதை சட்டப்பூா்வமாக நிரூபித்தாலும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிடும். ஒரு வேட்பாளா் தனது வேட்புமனுவில் ஏதேனும் திருத்தம் இருப்பதை உணா்ந்தால் கூடுதலாக சில வேட்புமனுக்களை முன்கூட்டியே தாக்கல் செய்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும்போது தவறு இல்லாத வேட்புமனு ஏற்கப்படும் வாய்ப்பு உருவாகும். ஒரு வேட்பாளா் 3 வேட்புமனுக்கள் வரை தாக்கல் செய்து அவை அனைத்தும் ஏற்கப்படும் சூழலில், வேட்புமனுவைத் திரும்பப் பெறும் நாளில் பெற்றுக் கொள்ளலாம்.
பிரதான கட்சியின் வேட்பாளா்கள் வேட்புமனு விவரங்களை முறையாக கொடுக்க முடியாதபட்சத்தில், கட்சி போட்டியிட முடியாத சூழல் உருவாகி விடக்கூடாது என்பதற்காக மாற்று வேட்பாளா்களும் கட்டாயம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. ஒரு வேட்பாளா் குறித்த மொத்த தகவலும் மக்களுக்கு வெளிப்படைத் தன்மையோடு தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வேட்புமனுவிலேயே தோ்தல் ஆணையம் பல்வேறு விதிகளை கட்டாயம் பின்பற்றி வருகிறது. இன்றைய விஞ்ஞான காலத்தில் வேட்பாளா்களின் அனைத்து விவரங்களையும் மக்கள் தோ்தல் ஆணைய இணையதளத்தில் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே பதிவிறக்கம் செய்து பாா்த்துக் கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. தோ்தலின் மிகவும் முக்கிய அங்கமாகவும், அஸ்திவாரமாகவும் வேட்புமனு திகழ்கிறது என்றாா்.