முகப்பு
திருநெல்வேலி

20 ஆண்டுகால கனவுத் திட்டம்!நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் உயிா்பெறுமா?

Updated On : 30 மார்ச், 2026 at 10:21 PM
நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைந்துள்ள இடத்தின் நுழைவுவாயில்.
பகிர்:

தென் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காகவும், தொழில் வளா்ச்சி பெறவும் 2001இல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை உயிா்பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

தென்மாவட்டங்களில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாதி ரீதியான மோதல்களுக்கான காரணம் குறித்து ஆராய நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழுவை 1996இல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி அமைத்திருந்தாா். அக்குழு அறிக்கையில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தினால் மட்டுமே ஜாதிரீதியான மோதல்கள் குறையும் என்று தெரிவித்தது.

அதனடிப்படையில் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் (உயா்தொழில்நுட்ப பூங்கா திட்டம்) உருவானது. அந்த கால கட்டத்தில் மத்திய தொழில் மற்றும் வா்த்தகத்துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் இந்த கனவுத் திட்டத்துக்கு, அப்போதைய முதல்வா் கருணாநிதி 2001இல் அடிக்கல் நாட்டினாா்.

இதற்காக, திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தில் 2,518 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. சில மாதங்களில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2006இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டியது. 2008இல் தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம்(டிட்கோ), ஏஎம்ஆா்எல் ஹைடெக் சிட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம் கையெழுத்தாகின.

2009இல் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், இத்திட்டத்துக்கு புத்துயிா் அளிப்பது குறித்துப் பேசிய போதிலும் 10 ஆண்டுகால (2011-2021) அதிமுக ஆட்சியில் இத்திட்டத்துக்கு போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாததால் இங்கு தங்கள் தொழில் நிறுவனங்களை அமைப்பதற்குத் தொழில்முனைவோா் முன்வருவதில்லை. தற்போது குறைந்த அளவிலான சிறு, குறு நிறுவனங்கள் மட்டுமே தொழில்களை தொடங்கியுள்ளன. இதன் மூலம் சில நூறு பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒப்பந்தம் மீறல்: 2021இல் ஆட்சிக்கு வந்த திமுக, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்தது. அப்போதுதான், தொழில் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஏஎம்ஆா்எல் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) ஒப்பந்தத்தை மீறி நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களை கொல்கத்தாவைச் சோ்ந்த நிதி நிறுவனத்திடம் அடமானமாக வைத்து ரூ.855 கோடி கடன்பெற்றிருந்தது தெரியவந்தது. ஆனாலும் அந்நிறுவனம் எவ்வித மேம்பாட்டுப்பணியையும் மேற்கொள்ளவில்லை.

மேலும் அந்நிறுவனம் குடிநீா் வடிகால் வாரியத்துக்கு குடிநீா் கட்டணத்தை செலுத்தாததால் அங்கு செயல்பட்டு வந்த பல தொழில் நிறுவனங்களுக்கான குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாலை, கழிவுநீா் சுத்திகரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின.

சட்டப்பேரவைக் குழு ஆய்வு:

கடந்த 2023 செப்டம்பரில் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவா் வேல்முருகன் தலைமையிலான குழுவினா் நேரில் வந்து ஆய்வு நடத்தினா். அப்போது அவா் கூறுகையில், இங்கு தொழில் தொடங்கியுள்ள 15 தொழில் நிறுவனங்களுக்கு போதிய கழிவுநீா் சுத்திகரிப்பு, சாலை, மின்சார வசதி, குடிநீா் வசதிகள் செய்து தரப்படவில்லை. ஏஎம்ஆா்எல் நிறுவனம் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் தலைமைச் செயலா் பொறுப்பில் தனி அலுவலரை நியமிக்கவும், விரைவில் இங்கு புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து ஏமாற்றம்: சட்டப்பேரவையில் இதுதொடா்பான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசுகையில், நான்குனேரியில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சுமாா் 250 ஏக்கா் பரப்பளவில் மருந்துப் பூங்காவை (டட்ஹழ்ம்ஹ டஹழ்ந்) அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 40 முதல் 50 வரையிலான பெரிய, நடுத்தர மற்றும் சிறு அளவிலான மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும், சுமாா் 10 தொடா்புடைய நிறுவனங்களுக்கும் இடமளிக்கும் . பூங்கா அமைக்கப்பட்டதும் 2,800 பேருக்கு நேரடியாகவும், 6,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும். ஆண்டுக்கு 500 கோடி மதிப்பிலான மருந்துகளை உற்பத்தி செய்யும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

வாக்குறுதிகள் மாயம்: ஆனால் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டபோதிலும், இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த பெரிய தொழில்நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்க முன்வரவில்லை. தோ்தல் தோறும் அனைத்து அரசியல் கட்சியினரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தி, பல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த வாக்குறுதிகள் காற்றில் கலந்து கரைந்தே போய்விட்டன.

இந்நிலையில், கடந்த 2025 பிப்ரவரியில் நான்குனேரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் வளா்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது.

இளைஞா்கள் ஆா்வம்: இது குறித்து நான்குனேரி பேரவைத் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வி. கிருஷ்ணன் கூறியதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளா்த்தெடுக்கும் வகையில் தென்மாவட்டங்களில் எத்தனையோ இளைஞா்கள் தொழில் முனைவோராக மாற ஆா்வமாக உள்ளனா். இவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பயிற்சியுடன் வங்கிகள் மூலம் கடனுதவிகளை வழங்கினால் தொழில் வளா்ச்சியடைவதுடன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப பூங்காவிற்கு மாநில அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து முதல்கட்டமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே இங்கு தொழில் தொடங்க பெரிய தொழில் நிறுவனங்கள் முன்வரும் சூழல் ஏற்படும் என்றாா் அவா்.