கன்னியாகுமரி

சின்னமுட்டம் துறைமுகத்துக்கு பாதுகாப்புப் படகு தேவை: மீனவர்கள் சங்கம் வலியுறுத்தல்

DIN

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்துவரும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு பாதுகாப்பு விசைப்படகு ஒன்றை வழங்க வேண்டுமென மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி}சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் தலைவர் ஏ.சகாயம் தலைமையில் நடைபெற்றது. செயலர் எ.ரெஜீஸ், பொருளாளர் ராயப்பர், துணைத் தலைவர் ஆர்.மார்ட்டின், துணைச் செயலர் சேசு அந்தோணி, துணைப் பொருளாளர் டி.ஜெயபாலன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டும் 300}க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தொழில் செய்து வருகிறார்கள். இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் செய்து வருகின்றனர்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீனவர்களுக்கு அதிகமான மீன்கள் கிடைக்கும் காலமாகும்.
இந்த மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்றும், கடலும் சீற்றம் மிகுந்திருக்கும். அப்போது மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் அலைகளில் சிக்கி விடுவதால் உயிருக்கும், உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இதுபோன்ற காலங்களில் விபத்துகளில் சிக்கி காணாமல் போகும் விசைப்படகுகளை மீட்க பயன்படுத்தப்பட்டு வந்த வலம்புரி என்ற பாதுகாப்புப் படகு பராமரிப்பின்றி பழுதடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற ஆபத்துகளால் மீனவர்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். விபத்துகளில் சிக்கும் படகுகளை மீட்க மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தூத்துக்குடி மற்றும் சென்னை போன்ற தலைமை அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்கின்றனர். அங்கிருந்து கடல் எல்லைப் பாதுகாப்பு கப்பல் வந்து பாதிக்கப்பட்ட மீனவர்களை தேடிச்சென்று படகுகளையும், மீனவர்களையும் காப்பாற்றி வருவது தற்போது நடைமுறையில் உள்ளது.
இதுபோன்று நிகழாண்டு ஜீசஸ் என்ற படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 மீனவர்கள் விபத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர். சந்தியா என்ற படகில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் கப்பல் வர தாமதமாகியிருந்தால் மீனவர்களை காப்பாற்ற இயலாமல் போயிருக்கும்.
எனவே, மீனவர்கள் நலன்கருதி, சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு நவீன வடிவிலான புதிய பாதுகாப்பு விசைப்படகை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT