குமரியில் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் முந்திரி, ரப்பர் தொழிலாளர்கள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நெருக்கடியும், வேலையிழப்பையும் சந்தித்து வரும் முந்திரி மற்றும்
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நெருக்கடியும், வேலையிழப்பையும் சந்தித்து வரும் முந்திரி மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த மே தினம் மகிழ்ச்சியின் தினமாக இல்லையென தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கிராம பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு சுழலும், குமரி மாவட்டப் பொருளாதாரத்தின் முக்கிய இரு துறைகளாக முந்திரி ஆலைத் தொழில் மற்றும் ரப்பர் தோட்டத் தொழில் உள்ளது. மாவட்டத்தில் கேரள எல்லையோரப் பகுதிகளில் 534 முந்திரி ஆலைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் நேரடியாக மட்டும் சுமார் 50 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்.
வெளி நாடுகளிலிருந்து முந்திரி இயற்குமதிக்கான வரி மற்றும் முந்திரிப் பருப்பு ஏற்றுமதிக்கான மானியம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முந்திரி ஆலைத் தொழில் நலிவடைந்து, தற்போது மாவட்டத்தில் 50 முந்திரி ஆலைகள் மட்டுமே இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முந்திரி ஆலைகளில் வேலை செய்து வந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலையிழந்த நிலையில் உள்ளனர். இதனால் இத்தொழிலாளின் குடும்பங்கள் வறுமைச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக வேலையிழப்பு காரணமாக விளிம்பு நிலையிலுள்ள முந்திரி ஆலைத் தொழிலாளர்களின் கனவுகள் சிதைந்து போயுள்ளன.
இதுகுறித்து குமரி மாவட்ட சிஐடியூ முந்திரி ஆலைத் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் விஸ்வம்பரன் கூறியதாவது:
ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கச்சா முந்திரிக்கு மத்திய அரசு தற்போது 9.36 சதவீத இறக்குமதி வரி விதித்துவிட்டு, அதில் 2.50 சதவீதம் மட்டும் குறைத்துள்ளது. மேலும் முந்திரி பருப்பு ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் முந்திரி ஆலைத் நிர்வாகங்களின் தொழிலாளர் லாப நோக்க செயல்பாடுகளால் முந்திரி ஆலைகள் நலிவடைந்து ஆயிரக்கணக்கான முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்றார்.
ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்:
குமரி மாவட்டத்தில் மே தினம் என்றால் படு உற்சாகமாகக் காணப்படுவது ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தான். ரப்பர் தோட்டப் பகுதிகளில் கட்சிக் கொடிகளை ஏற்றுவதும், இனிப்பு வழங்குவதும், மேதின கலை நிகழ்ச்சியுடன் கூடிய மேதினப் பேரணிகளில் பங்கேற்பதுமாக ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் உற்சாகமாக மேதினம் கொண்டாடிய காலங்கள் இருந்து வந்தன. இப்போது நிலமை தலைகீழாய் மாறியிருக்கிறது.
ரப்பர் தோட்டங்களில் உரிய காலங்களில் ஊதியம் உயர்த்தப்படாமை, தோட்டங்களில் ஆள்குறைப்பு, தொழிலாளர்களுக்கான சலுகைள் மறுப்பு போன்ற பல்வேறு காரணங்கள் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் அரசுத் துறை நிறுவனமான அரசு ரப்பர் கழகம் உரிய காலங்களின் புனரமைக்கப்படாத நிலையில், அந்த நிறுவனத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அடிப்படை ஊதியத்திற்குக் கூட போதுமானதாக இல்லாத பால் வற்றிய முதிர்ந்த ரப்பர் மரங்களில் பால்வடித்து பெரும்பாலான தொழிலாளர்கள் ஓய்ந்து போயுள்ளனர்.
கடந்த 2016 டிசம்பர் முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் இதுவரை 27 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதிய ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று நிறுவனமாக செயல்படும் தனியார் ரப்பர் தோட்டங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.
தொழிலாளர்கள் பால்வடிக்கும் ரப்பர் மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், ரப்பர் மரங்களில் தினசரி பால்வடிக்கும் முறைக்குப் பதிலாக வாரத்தில் ஒரு நாள் பால்வடிக்கும் முறைக்கு மாறியுள்ளதும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும் ரப்பரின் தொடர் விலை வீழ்ச்சி, சிறு தோட்டங்களில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு தடைக்கல்லாகவும் மாறியுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட சிஐடியூ தோட்டம் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் எம். வல்சகுமார் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோதப் போக்குகள் ஒருபுறமென்றால், மறு புறம் ரப்பர் தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடி மற்றும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசு ரப்பர் கழகம் 2016 டிசம்பர் முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆனால் இதுவரை 27 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு காணப்படாத நிலை உள்ளது. தொழில் மேம்பாடும் தொழிலாளர்களின் மேம்பட்ட வாழ்வும் தான் வளமான நாட்டின் அடையாளங்கள் என்ற நிலையில் தொழிலாளர்களின் நலன் காக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் தங்களின் உரிமை தினமான மேதினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட முடியும் என்றார்.