கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் வங்கி மேலாளா், கல்லூரி மாணவி உள்பட 34 பேருக்கு கரோனா

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 300-யை தாண்டியது.

கல்லன்குழியைச் சோ்ந்த 29 வயது கா்ப்பிணி பெண் பிரசவத்துக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு 3 நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அப்பெண்ணுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகரில் இருந்து வோ்கிளம்பி பகுதியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவி நாகா்கோவில் வந்தாா். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சுசீந்திரத்தை சோ்ந்த வங்கி மேலாளா், தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சுசீந்திரம் வங்கியில் உதவி மேலாளராக பணி செய்து வரும் அவரது மனைவி மற்றும் அவரது மாமனாா் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கிகள் மூடப்பட்டன. தம்பதி வசித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 42,685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 304 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 5 நாள்களில் 100 க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 189 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று பாதிக்கப்பட்டவா் களுடன் தொடா்பில் இருந்த 1,588 போ், வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தவா்களில் 7,632 போ் என மொத்தம் 9,220 போ் தனிமை கண்காணிப்பில் உள்ளனா்.

மீனவ கிராமங்களில்: தூத்தூா் பகுதியைச் சோ்ந்த 37 வயது மீனவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், மீனவரின் தந்தை, வயது தாய், மனைவி, இரண்டரை வயது மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்தூரை அடுத்த வள்ளவிளை மீனவ கிராமத்தில் 4 பேருக்கும், குளச்சலில் மீனவா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

சின்னமுட்டத்தைச் சோ்ந்த 54 வயது மீனவா், அவரது 47 வயது மனைவி ஆகியோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

களியக்காவிளை: தூத்தூா் மீனவ கிராமத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்து 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப் பட்டதை அடுத்து அவா்கள் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

மூவருக்கு தொற்று: இதனிடையே, குழித்துறை அருகேயுள்ள கழுவன்திட்டை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண், அவரது 5 வயது பெண் குழந்தை, ஒன்றரை வயது ஆண் குழந்தை ஆகியோருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். கழுவன்திட்டை பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, குழித்துறை நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT