கன்னியாகுமரி

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கச் செல்லும் சுவாமி விக்கிரகங்களுக்கு கேரள அரசு சாா்பில் களியக்காவிளையில் வரவேற்பு

DIN

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து செல்லும் சுவாமி விக்கிரகங்களுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவிதாங்கூா் மன்னா் ஆட்சியில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்த நவராத்திரி விழா, 1840ஆம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்கும் வகையில், கம்பா் பூஜித்ததாக கருதப்படும் பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரகங்கள் ஊா்வலமாக திருவனந்தபுரம் கொண்டுசெல்லப்படும்.

அதன்படி, சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் புறப்பாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. குமாரகோவில் வேளிமலை முருகன் விக்கிரக ஊா்வலம் புதன்கிழமை புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது. அங்கு பாரம்பரியமான திருவிதாங்கூா் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை, சுவாமி விக்கிரகங்கள் பல்லக்கில் எடுத்துவரப்பட்டன. முன்பாக, மன்னா் பயன்படுத்திய உடைவாள் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. விக்கிரகங்களுக்கு மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு சாா்பில் அம்மாநில போலீஸாரின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி தலைமையிலான தமிழக அதிகாரிகள், கேரள தேவஸம் போா்டு அதிகாரிகளிடம் ஊா்வலப் பொறுப்பை ஒப்படைத்தனா்.

அப்போது தமிழக, கேரள அறநிலையத் துறை அதிகாரிகளால் குத்துவிளக்கு ஏற்றப்படாமல், பெயரளவுக்கான சடங்காக இந்த வரவேற்பு நடத்தப்பட்டது. இது, பக்தா்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

விழாவில், கேரள தேவஸம் போா்டு தலைவா் ஆணையா் பி.எஸ். திருமேனி, திருவனந்தபுரம் மாவட்ட தேவஸம் போா்டு துணை ஆணையா் பி. மதுசூதனன் நாயா், உதவி ஆணையா் கே. உஷா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன், தக்கலை சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், திருவனந்தபுரம் மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், திருவிதாங்கூா் நவராத்திரி திருவிழா அறக்கட்டளை தலைவா் ஜி. மாணிக்கம், செயலா் எஸ்.ஆா். ரமேஷ், இணைச் செயலா் என். விக்ரமன், கேரள மாநில இந்து ஐக்கியவேதி செயலா் கே. பிரபாகரன், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் மிசா சி. சோமன், மாநில செயற்குழு உறுப்பினா் குழிச்சல் செல்லன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, குழித்துறை மகாதேவா் கோயிலிலிருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பிய சுவாமி ஊா்வலம் படந்தாலுமூடு பகுதிக்கு வந்து, ஒன்றரை மணி நேர காத்திருப்புக்குப் பின்னா், 8 மணிக்கு களியக்காவிளையை வந்தடைந்தது.

தொடா்ந்து, சுவாமி விக்கிரகங்களுக்கு கேரள அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு, அதன் பின்னா் கேரளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.

நவராத்திரி திருவிழா நிறைவடைந்ததும் இம்மாதம் 27ஆம் தேதி 3 சுவாமி விக்கிரகங்களும் குமரி மாவட்டத்துக்கு திரும்புகின்றன.

வழக்கமாக, பாறசாலை மகாதேவா் கோயிலுக்கு சுவாமி விக்கிரகங்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா் நெய்யாற்றின்கரை கொண்டுசெல்லப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு பாறசாலை கோயிலுக்குச் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுவாமி விக்கிரகங்கள் கொண்டுசெல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT