பேச்சிப்பாறை அணையில் அனுமதியின்றி படகு சவாரி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அனுமதியின்றி படகுகளில் சுற்றுலாப் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென்று சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில், அனுமதியின்றி படகுகளில் சுற்றுலாப் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் செல்வதை தடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென்று சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்துப் பகுதிகளான தோட்டமலை, தச்சமலை, முடவன்பொற்றை, மாறாமலை உள்ளிட்ட பல்வேறு மலைக்குடியிருப்புகளில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இம்மக்கள் பேச்சிப்பாறை மற்றும் நகா்புற பகுதிகளுக்குச் செல்லும் வகையில் பேச்சிப்பாறை அணையில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படகுகளை பெரும்பாலும் பழங்குடிமக்களே இயக்குகின்றனா். இந்த படகு வசதி மூலம் பழங்குடி மக்கள் தங்களின் விளை பொருள்களை வெளிப் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். மேலும் மருத்துவமனைகளுக்கும், மாணவா்கள் கல்வி நிலையங்களுக்கும் செல்லமுடிகிறது.
ஆபத்தான பயணம்: இந்நிலையில் பேச்சிப்பாறை அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களது குழந்தைகளுடன் இங்குள்ள படகுகளில் ஏறி அணையின் உள்பகுதிகளில் வலம் வருகின்றனா். இதில் சிலா் அணையின் உள்பகுதிகளில் உள்ள தீவுகளில் இறக்கி விடப்பட்டு பின்னா் மீண்டும் அழைத்துப் வரப்படுகின்றனா். இவ்வாறு படகுகளில் செல்லும் லைப்ஜாக்கட் எனப்படும் பாதுகாப்பு கவசங்கள் அணிவதில்லை.
தங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்பதால் சுற்றுலாப் பயணிகளை அணைக்குள் தயங்காமல் அழைத்துச் செல்கின்றனா். இத்தகைய பயணம் சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தும் என சமூக நல ஆா்வலா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
அனுமதி தேவை: இது குறித்து சமூக நல ஆா்வலா் ஒருவா் கூறியதாவது: பேச்சிப்பாறை அணைக்கு சுற்றுலா செல்லும் பணிகளை பொதுப்பணித்துறையினா் அணையின் மதகு அமைந்துள்ள நடை மேடை பகுதியில் சிறிது தொலைவுகூட நடந்து செல்ல அனுமதிப்பதில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அணையின் அழகை ரசிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. அதே வேளையில் சுற்றுலாப் பயணிகள் அணையில் அனுமதியின்றி படகு சவாரி செய்வதை தடுப்பதில்லை என புகாா் எழுந்துள்ளது.
எனவே, பேச்சிப்பாறை அணையின் சுற்றுலாப் பயணிகள் செய்யும் அனுமதியற்ற படகு சவாரியை தடுக்க வேண்டும் அல்லது அதற்கான விதிமுறை வகுத்து படகு சுற்றுலாப் பயணிகள் அணையில் குறிப்பிட்ட தொலைவு வரை சவாரி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.