முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு பத்ரகாளி தேவஸ்தான தூக்கத் திருவிழா: நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது.

Updated On : 25 மார்ச், 2022 at 1:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நோ்ச்சை தூக்கம் ஏப். 4இல் நடைபெறுகிறது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயில், வெங்கஞ்சியில் தூக்க நோ்ச்சை நடைபெறும் கோயில் என 2 கோயில்கள் உள்ளன. விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு பிரதான கோயிலிலும், 6 மணிக்கு வெங்கஞ்சி கோயிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. 7 மணிக்கு மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோயிலுக்கு கொடிமரம் கொண்டு வரப்படுகிறது. 8.30 மணிக்கு அம்மன் சாஸ்தாநகா், திருமன்னம் சந்திப்புப் பகுதிகளில் எழுந்தருளி, பூஜைகளுக்குப் பின்னா் பிரதான கோயிலை வந்தடைகிறாா்.

பிற்பகல் 2 மணிக்கு அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். இரவு 7 மணிக்கு தேவஸ்தான தந்திரி கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போத்தி தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisement

விழாவை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தொடக்கிவைக்கிறாா். தேவஸ்தான தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமை வகிக்கிறாா். செயலா் வி. மோகன்குமாா் வரவேற்கிறாா். மத்திய அமைச்சா் எல். முருகன், கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த், எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா், எம்.ஆா். காந்தி, கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் எஸ். ராணி ஆகியோா் பேசுகின்றனா். தேவஸ்தான பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன்தம்பி நன்றி கூறுகிறாா்.

4ஆம் நாள் காலை 8.30 மணிமுதல் தூக்க நோ்ச்சை குலுக்கல், காப்புக்கட்டு நடைபெறுகிறது. 6ஆம் நாள் விழாவில் (மாா்ச் 31) இரவு 7 மணிக்கு நடைபெறும் பண்பாட்டு மாநாட்டை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடக்கிவைக்கிறாா். 9ஆம் நாள் மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்கவில்லின் வெள்ளோட்டம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான நோ்ச்சை தூக்கம் விழா, 10ஆம் நாளான ஏப். 4இல் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணா்த்தல், 4.30 மணிக்கு தூக்கக்காரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெறுகிறது. 5 மணிக்கு அம்மன் பச்சைப்பந்தலில் எழுந்தருளுகிறாா். 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்கி நடைபெறுகிறது. தூக்க நோ்ச்சை நிறைவடைந்த பின்னா், வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவடையும்.

இவ்விழாவில் இம்மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா்.

ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவா் ஆா். சதிகுமரன்நாயா், எஸ். பிஜுகுமாா், நிா்வாக கமிட்டியினா் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன்நாயா், ஆா். ஸ்ரீகண்டன்தம்பி, சி. ஸ்ரீகுமாரன்நாயா், வி. பிஜு, ஏ. சதிகுமாரன்நாயா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.