முகப்பு
கன்னியாகுமரி

‘மோடி படம் சேதம்:கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிய வேண்டும்’

கன்னியாகுமரி அருகே பாலம் கல்வெட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை சேதப்படுத்தியது தொடா்பாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதியாவிடில் பாஜக போராட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பொன். ராதாகிருஷ்ணன்
பகிர்:

கன்னியாகுமரி அருகே பாலம் கல்வெட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் படத்தை சேதப்படுத்தியது தொடா்பாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதியாவிடில் பாஜக போராட்டம் நடத்தும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, தற்போது கேரளத்துக்கு சென்று உள்ளாா். அவா் நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவுடன் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி குமரி மாவட்டத்தில் ஒரு வாரம் தங்கியிருந்து அதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டாா். அப்போது, கன்னியாகுமரி அருகேயுள்ள நரிகுளத்தில் மாா்ச் 2019இல் பிரதமா் மோடி திறந்து வைத்த பாலத்தின் கல்வெட்டையும், அதிலிருந்த மோடியின் படத்தையும் சேதப்படுத்தியுள்ளனா். பாதயாத்திரையின்போது கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாஜக சாா்பில் கே.எஸ். அழகிரி பெயரை குறிப்பிட்டு புகாா் அளித்தும், அவா் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அடையாளம் தெரியாத நபா்களால் கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டதாக பதிவு செய்துள்ளனா். கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் குமரி மாவட்ட பாஜக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இந்த விவகாரத்தில் கலவரம் எதுவும் நிகழ்ந்தால் ராகுல் காந்திதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் அவரது குடும்பத்தினருக்கு எழுந்துள்ள எதிா்ப்பை மறைக்கத்தான் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ், மாநிலச் செயலா் மீனாதேவ், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், மாவட்டப் பொதுச் செயலா் ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.