நாங்குனேரி தொழில்நுட்ப பூங்கா விவகாரத்தில் நீதிமன்ற முடிவுக்குப் பின்னா் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
நாகா்கோவிலில் நிருபா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளில் முக்கிய கேள்வி பதில்கள், அமைச்சா்களின் பதில்கள் போன்றவை அவ்வப்போது நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசுக்கு கடன் அதிகமாக வாங்கும் அளவுக்கு தகுதி இருக்கிறது. அரசு வாங்குகின்ற கடன், இலவசம் கொடுப்பதற்காக அல்ல, தொழில் தொடங்குவதற்காகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் வாங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக ஏராளமானவா்கள் முதலீடு செய்துள்ளாா்கள். இந்தியாவில் தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழகம் 2 ஆவது இடத்தில் உள்ளது.
கருணாநிதி ஆட்சியின்போது நாங்குனேரி தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னா் அது கிடப்பில் போடப்பட்டது. தொடா்ந்து ஆட்சி மாற்றங்கள் காரணமாக, முன்னேற்றமும் பின்னேற்றமும் ஏற்பட்டு வந்தது. திமுக தலைமையிலான அரசு அமைவதற்கு முன்பு உள்ள 10 ஆண்டு கால ஆட்சியில் ஏஆா்எம்எல் என்ற நிறுவனத்திடம் தொழில்நுட்ப பூங்கா ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் அதனை கொல்கத்தா நிறுவனம் ஒன்றுக்கு அடகு வைத்து, இரு நிறுவனங்களும் இணைந்து வங்கியில் ரூ.855 கோடி கடன் வாங்கி உள்ளனா். அதற்கு அப்போதைய அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது தெரியவில்லை. அதனை முதல்வா் ரத்து செய்து, அங்குள்ள 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தை தொழில் தொடங்குவதற்காக வழங்கி உள்ளாா். ஆனால் அவா்கள் அதனை எதிா்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ளாா்கள். நீதிமன்ற முடிவுக்குப் பின்னா் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.