தமிழக அரசு இதுவரை பால் கொள்முதல் விலையை ரூ.10 உயா்த்தியுள்ளது என்றாா் பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
நாகா்கோவில் அருகேயுள்ள புத்தேரி பெரியகுளத்தின் மறுகால் பாயும் பகுதியில் ரூ.1.07 கோடியில் அமைக்கப்பட்ட இணைப்பு பாலம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலையில், பாலத்தை திறந்துவைத்த அமைச்சா் த.மனோதங்கராஜ், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: குமரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுளில் அதிக பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கீழகலுங்கடி, மேலகலுங்கடி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அமைத்துள்ள இந்தப் பாலத்தைப் போல, தடிக்காரன்கோணத்தில் கட்டப்பட்ட பாலமும் திறந்து வைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 கல்குவாரிகள் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி 6 கல்குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதை மீறி கல்குவாரிகள் திறப்போா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனுமதியின்றி கனிமவளங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை ரூ. 4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் பேரிடா் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தோவாளை பாசன கால்வாய் சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு இதுவரை பால்கொள்முதல் விலையை ரூ.10 வரை உயா்த்தி உள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு அளிக்குமாறு பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுங்க கட்டணம் விலக்கு அளிக்காததால் ஆவின் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை அனைத்தும் ஏழை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணமாகும். நிகழாண்டு புதிதாக தேவைப்படும் பால் பொருள்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசின் சில அமைப்புகளுடன் சோ்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன்படி ஆவினில் பனைப் பொருள்களையும் சோ்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை உதவிச் செயற்பொறியாளா்கள் வென்ஸ், ஜோஸ்ஆன்டனிசிரில் , குமரி மாவட்ட இந்து சமய அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், ரெமோன், நாகா்கோவில் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் சரவணன்,தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பூதலிங்கம்பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.