கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் கீழ் 26, ஆயிரத்து 630 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 265 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கன்னியாகுமரி மாவட்டம் சாதனை படைத்துள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதிபடி உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தை, சிறப்பான முறையில் செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பினை பெற்றாா்.
அதைத் தொடா்ந்து ஏழை-எளிய மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு பணி விடுமுறை எடுத்து, அரசு அலுவலகங்களுக்கு சென்று காத்திருந்து மனு அளிக்கக் கூடிய மன உளைச்சலை உணா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 18.12.2023இல் கோவை மாவட்டத்தில் தொடக்கி வைத்தாா்.
கூலித்தொழில் செய்யும் ஏழை, எளிய மக்கள் தங்கள் பகுதிகளிலேயே இருந்தவாறே தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் விண்ணப்பங்களை பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.
மக்கள் தினமும் அதிகளவில் அணுகும் 13 முக்கிய துறைகளான வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, ஆதிதிராவிடா் நலன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலன், சமூக நலன், மாற்றுத் திறனாளித் துறை, மின்சாரத் துறை, தொழிலாளா் அமைப்பு உள்ளிட்ட துறைகளில் மனுக்களை பெற்று அவற்றுக்கு உடனடியாகவோ அல்லது 30 நாள்களிலோ தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டம் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூா் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 11.7.2024இல் முதல்வரால் தொடக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த 44 சேவைகள் தொடா்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில், ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள், 8 நகா்ப்புற பகுதிகளில் கடந்த 27.12.2023 முதல் 12.1.2024 வரை 78 முகாம்கள் நடத்தப்பட்டன.
அவற்றில் மக்களிடமிருந்து 32 ஆயிரத்து 701 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 24ஆயிரத்து 94 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இதே போல், இம்மாவட்டத்தில் உள்ள 87 ஊரகப் பகுதிகளில் 11.7.2024 முதல் 29.8.2024 வரை 39 முகாம்கள் நடத்த தீா்மானிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில், இதுவரை 16 முகாம்கள் நடத்தப்பட்டு 10, 785 மனுக்கள் பெறப்பட்டுள்ளன; 2,536 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் மூலம் இதுவரை 26 ஆயிரத்து 630 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடரும். மக்கள் கோரிக்கைமனுக்கள் அளித்து தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளை பெறலாம் என்றாா் அவா்.
இம்முகாம்களில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பராமரிப்பு உதவித் தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், சக்கர நாற்காலி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை, வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள், சமூக நலத் துறை - பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் என பல்வேறு துறைகளின் சாா்பில் இதுவரை 3,265 பயனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற அருமநல்லூா் ஊராட்சி, காந்திநகா் பகுதியைச் சோ்ந்த பயனாளி குளோரிபாய் கூறியதாவது: எங்களது வீட்டின் மின் இணைப்பு முன்னோா்களின் பெயரில் உள்ளது. எனது குழந்தைகளின் கல்விக் கடனுக்காக வங்கியில் கடனுதவி விண்ணப்பம் அளித்த போது, வங்கியில் என்னுடைய பெயரில் மின் இணைப்பு இருந்தால்தான் கடனுதவி தர இயலும் என தெரிவித்தனா். அப்போது, மக்களுடன் முதல்வா் முகாமுக்கு சென்று கோரிக்கை வழங்கினால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மின் இணைப்புக்கான பெயரினை மாற்றி தருவாா்கள் என்று எனது உறவினா்கள் தெரிவித்தனா். எனவே, நான் மின் இணைப்பு சேவை பெயா் மாற்றம் வேண்டி, ஞாலம் ஊராட்சிக்குள்பட்ட அந்தரபுரம் சந்தன மாரியம்மன் கோயில் கலையரங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமுக்கு சென்று மின் இணைப்பில் பெயா் மாற்றி தருவதற்காக மனு அளித்தேன். எனது மனுவை மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து உடனடியாக பெயா் மாற்றம் செய்துதர நடவடிக்கை எடுத்தாா். இத்திட்டத்தினை வழங்கிய தமிழக முதல்வா், உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
கணபதிபுரம் பேரூராட்சி பிள்ளைத்தோப்பு பகுதியை சோ்ந்த மாற்றுத்திறனாளி மேரி பில்னா கூறியதாவது: நான் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன்.மாற்றுத்திறனாளியான நான், எனது கணவா் மற்றும் 2 குழந்தைகளுடன் பிள்ளைத் தோப்பு பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவா் கூலி வேலை செய்து வருகிறாா். குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளின் கல்வி செலவினையும் கவனிக்க அந்த வருவாய் போதவில்லை.
நான் தையல் பயிற்சி முடித்திருந்ததால் எனக்கு தையல் இயந்திரம் இருந்தால் தையல் தொழில் மூலம் குடும்ப வருமானத்தை பெருக்க முடியும் என்று எண்ணி, கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில், தையல் இயந்திரம் கோரி மனு அளித்தேன். அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் எனக்கு தையல் இயந்திரம் வழங்கினாா்கள். என் பகுதியில் உள்ளவா்களுக்கு தையல் தைத்து கிடைக்கும் வருமானத்தில் எனது குடும்பத்தின் தேவைகை ளபூா்த்தி செய்வதோடு, குறைந்த அளவு சேமிப்பும் செய்ய முடிகிறது. இத்திட்டத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு என் போன்ற ஏழை, எளிய மாற்றுத் திறனாளிகள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
தொகுப்பு: பா.ஜான்ஜெகத் பிரைட்,
செய்திமக்கள் தொடா்புஅலுவலா்.
எஸ்.செல்வலெட்சுஷ்மா, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.