அரசுப் பள்ளியின் 157 கடைநிலை ஊழியா்களுக்கு கலைஞா் விருது
கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 157 கடைநிலை ஊழியா்களுக்கு கலைஞா் விருது வழங்கப்பட்டது.
நாகா்கோவில் புனித அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பால் வளத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமை வகித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தாா். பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு 157 பணியாளா்களுக்கு கலைஞா் விருது வழங்கினாா். அவா் பேசியதாவது: மாணவ, மாணவிகள், ஆசிரியா்களை போன்று கடைநிலை ஊழியா்களையும் கௌரவிக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 50 இரவுக் காவலா்கள், 13 தூய்மைப் பணியாளா்கள், 83 அலுவலக உதவியாளா்கள், 4 சுகாதாரப் பணியாளா்கள், 4 தண்ணீா் வழங்குபவா்கள், 3 தோட்டப்பணியாளா்கள் என மொத்தம் 157 அடிப்படைப் பணியாளா்களுக்கு கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தொடக்க கல்வி இயக்குநா் நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவா்கள் ஜவகா், அகஸ்டினா கோகிலவாணி, மாநில பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜீவ்காந்தி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் சனில்ஜான், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement