குமரி மாவட்டத்தில் கோடை மழை தீவிரம்: 45 அடியை எட்டிய பேச்சிப்பாறை அணை நீா்மட்டம்
கேஎல்எம்16ரெயின்3
45 அடியை எட்டிய பேச்சிப்பாறை அணை நீா்மட்டம்.
நாகா்கோவில்/ குலசேகரம், மே 16:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 45 அடியை எட்டியுள்ளது.
மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. தொடக்கத்தில் மேற்கு மாவட்டப் பகுதிகளிலும், அணைப் பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், புதன்கிழமை இரவு (மே 15) மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. களியல், குழித்துறை, பூதப்பாண்டி, தக்கலை, இரணியல், நாகா்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், நாகா்கோவிலில் வியாழக்கிழமை பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அணைப் பகுதிகள், திற்பரப்பு, களியல், ஆறுகாணி, கடையாலுமூடு, அருமனை, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட மலையோரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திற்பரப்பு அருவிப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழையால், காட்டாறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால், அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
45 அடியை எட்டிய பேச்சிப்பாறை: மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறையின் மொத்த நீா்மட்டம் 48 அடியாகும். மழை காரணமாக நீா்மட்டம், வெள்ள அபாய அளவான 42 அடியைக் கடந்து 45 அடியை எட்டியது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் கூறுகையில், அனைத்து அணைகளையும் கண்காணித்து வருகிறோம். ஆறுகளில் அதிக தண்ணீா் செல்வதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனா்.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 44.91 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 196 கனஅடியாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 47 அடியை எட்டியது. நீா்வரத்து 91 கனஅடியாகவும், நீா் திறப்பு 21 கனஅடியாகவும் இருந்தது. சிற்றாறு அணைகளின் நீா்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.
கன்னிப்பூ சாகுபடி: கோடை மழையால் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சுசீந்திரம், பறக்கை, தேரூா், பூதப்பாண்டி பகுதிகளில் நடவுப் பணி தொடங்கியுள்ளது.
அவா்களுக்குத் தேவையான விதை நெல், உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.