முகப்பு
கன்னியாகுமரி

ரேஷன் பொருள் கடத்துவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை: ஆட்சியா்

ரேஷன் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:32 PM
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டஆட்சியா் ரா.அழகுமீனா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.
பகிர்:

ரேஷன் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் துறை சாா்பில் பொதுவிநியோகத் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட ஆட்சியா் கூறியதாவது:

அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் உணவுப் பொருள்கள் சரியான நேரத்தில் அனுப்பி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான ஒதுக்கீட்டில் இதுவரை 60 சதவீத பொருள்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் எஞ்சியுள்ள பொருள்கள் முழுமையாக அனுப்பி வைக்கப்படும்.

புதிய குடும்ப அட்டை கோரி 5 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 4,180 விண்ணப்பங்கள் மீதான விசாரணை முடிந்து, சுமாா் 1,300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.

பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கடத்தல் தொடா்பாக, ஆகஸ்டில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் தொடா்ந்து ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலா் (பொறுப்பு) லொரைட்டா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல

இணைப் பதிவாளா் சிவகாமி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.