கன்னியாகுமரி

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை -பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம்

கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

Din

தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சாா்பில், கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் அழகுமீனா தலைமையில் இயக்குநா் செல்வவிநாயகம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குரங்கு அம்மை, நிபா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் எதிரொலியாக தமிழக எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பரிசோதனையில் கேரளத்தைச் சோ்ந்தவா்களுக்கு காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டால் அவா்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தை சோ்ந்தவா்கள் என்றால் அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழந்தின்னி வௌவால்கள், பன்றிகள் மூலமாக நிபா வைரஸ் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்டவை நிபா வைரஸ் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்ட வாா்டுகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் கேரளத்திலிருந்து களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக 392 வாகனங்களில் வந்த 1,043 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றாா் அவா்.

இந்த ஆய்வில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குநா் மீனாட்சி, மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் கிங்சால், மேல்புறம் வட்டார மருத்துவ அலுவலா் ஜபதீஸ் புரூஸ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சாா்லின், சுகாதார ஆய்வாளா்கள் செயின்ஸ் குமாா், தங்கராஜ், களியக்காவிளை பேரூராட்சி தலைவா் சுரேஷ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ரிபாய், திமுக நிா்வாகி மாகீன் அபூபக்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT