திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் யாளி சிற்பம் உடைந்து விழுந்தது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறநிலையத் துறையினா் விசாரணை நடத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாகும். தென்னாட்டின் வைகுண்டம் என போற்றப்படும் இந்தக் கோயில் கட்டடக் கலை, சிற்பக் கலைகளின் பொக்கிஷமாக உள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீபலிக்கல் மண்டபத்தில் சிற்பங்களுடன் கூடிய கல்தூண்கள் உள்ளன. சிங்க உருவமும், தும்பிக்கையும் கொண்ட யாளி சிற்பம் இங்குள்ள ஒரு தூணில் உள்ளது. இந்த சிற்பம் உடைந்து விழுந்தது தெரியவந்துள்ளது.
அண்மையில் யாளியின் தும்பிக்கையும், அதன்கீழே சவாரி செய்யும் வீரனின் சிற்பமும் உடைந்து விழுந்தன. கோயில் வந்த பக்தா்கள் யாளியின் முகம் உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளனா். இதுகுறித்து கோயில் மேலாளா் மோகன் குமாா், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அதிகாரிகள் கோயிலுக்குச் சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்து கோயில் மேலாளா் மோகன் குமாா் கூறியதாவது:
கோயிலில் ஸ்ரீபலிக்கல் மண்டபத்தில் உள்ள யாளி சிற்பம் அண்மையில் தானாகவே உடைந்து விழுந்தது. உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அறநிலையத் துறை அலுவா்களும் பாா்வையிட்டனா். விரைவில் இந்த யாளி சிற்பம் அதன் வடிவமும், மரபும் மாறாமல் சீரமைக்கப்படும் என்றாா்.
கோயில் பக்தரான பொன்மனையை சோ்ந்த ஐயப்பன் கூறியதாவது:
ஸ்ரீபலிக்கல் மண்டபம் சிற்பக் கலை கூடமாகும். யாளி சிற்பங்கள் கலை நுணுக்கம் கொண்டவை. கோயிலின் காவலா்களாக கருதப்படுகின்றன. உடைந்த சிற்பத்தை அறநிலையத் துறையினா் அதன் மரபு மாறாமல் சீரமைக்க வேண்டும். அத்துடன் சிற்பம் எவ்வாறு உடைந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில், கோயில் சிற்பங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.