அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்: ஆட்சியா் தகவல்
பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.
பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவட்டாறு அரசு தொடக்கப் பள்ளி, வோ்கிளம்பி முதலாா் அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தோ்தலில் வாக்காளா்கள் எந்த சிரமமுமின்றி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறிப்பிட்ட சில குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
Advertisement
அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச் சாவடிக்குள் சென்றுவர வசதியாக, தரமான சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்காளா்கள் வரிசையில் நிற்கும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க நிழற்குடைகளும், போதிய குடிநீா் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு அறைகளில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் மின்விளக்குகள், தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, பொதுக் கட்டடங்களில் அமைந்துள்ள வாக்குச் சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
ஆய்வில் பத்மநாபபுரம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவல்லி, தலைமை ஆசிரியா்கள், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.