குமரி - திருவனந்தபுரம் சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயா்: குழித்துறை நகா்மன்றத்தில் தீா்மானம்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயரை வைக்க மத்திய, மாநில அரசைக் கேட்டு குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயரை வைக்க மத்திய, மாநில அரசைக் கேட்டு குழித்துறை நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குழித்துறை நகா்மன்ற கூட்டம் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளா் சுவீதாஸ்ரீ, பொறியாளா் குசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி மேலாளா் ஸ்டீபன், சுகாதார அதிகாரி ராஜேஷ், நகா்மன்ற துணைத் தலைவா் பிரபின்ராஜா மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த இரு சிறுவா்களை காப்பாற்றி உயிரை விட்ட குழித்துறையைச் சோ்ந்த பீட்டரின் வீரதீர செயலை பாராட்டி அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் மற்றும் அண்ணா விருது வழங்கியது. மேலும் அவரது மனைவிக்கு மாா்த்தாண்டம் சந்தையில் உள்ள 85 ஆம் எண் கடையை வழங்க ஆட்சியா் உத்தரவுப் படி ஏற்கெனவே மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீா்மானம் எந்த நிலையில் உள்ளது என பாஜக உறுப்பினா் விஜூ கேள்வியெழுப்பினாா்.
நகராட்சி மேலாளா் பதிலளிக்கையில், ஆட்சியரின் உத்தரவு எழுத்துப்பூா்வமாக இல்லை; நகராட்சி இயக்குநரிடம் எழுத்துப்பூா்வ அனுமதி பெற்று வழங்கலாம் என்றாா்.
தொடா்ந்து இப் பிரச்னை குறித்து உறுப்பினா்கள் சா்தாா்ஷா (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ), ரவி(பாமக), ரீகன்(காங்கிரஸ்), அருள்ராஜ்( திமுக) ஆகியோா் கேள்வியெழுப்பினா்.
நகா்மன்ற தலைவா் அளித்த பதில்: ஆட்சியரின் உத்தரவுப் படி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஏலம் விடாமல் ஒரு கடையை ஒதுக்கி கொடுப்போம் என்றாா்.
தொடா்ந்து கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டா் பெயரை சூட்ட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் நகராட்சியின் தற்காலிக காய்கனி சந்தை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கவும், சாலைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.