மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்புக்கு 800 போலீஸாா்!
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழா பாதுகாப்புப் பணியில் 800 போலீஸாா் ஈடுபட உள்ளனா்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியி’ஈடுள்ள செய்திக்குறிப்பு: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 1 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா பாதுகாப்புப் பணியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
கடற்கரை பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். 18 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பக்தா்களுக்கு உதவும் வகையில், மே ஐ ஹெல்ப் யூ, கியூ ஆா் கோடு, காவல் உதவி கியூ ஆா் கோடு பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலோர பாதுகாப்புப் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் மற்றும் மாவட்ட காவல்துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்.
போக்குவரத்தில் மாற்றம்: 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவனந்தபுரம், தக்கலை, நாகா்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் திங்கள்சந்தை, லட்சுமிபுரம் வழியாக நடுவூா்கரை தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும், மாா்த்தாண்டம், கருங்கல் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் குளச்சல் வழியாக வெட்டுமடை தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும், நாகா்கோவிலில் இருந்து வரும் பேருந்துகள் மணவாளக்குறிச்சி வழியாக புதூா் தற்காலிக பேருந்து நிறுத்தத்தையும் பயன்படுத்த வேண்டும்.
6 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் வேன் ஆகியவை லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும். வடக்கு கோவிலன்விளை, லட்சுமிபுரம் கல்லூரி வளாக மைதானம் ஆகியவற்றில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். திருவிழாவையொட்டி, 24 மணி நேர காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.